Skip to main content

அய்யா வீடு திறந்து தான் கிடக்கு

அது ஒரு குளிர்கால இரவு. ஏழு மணி தான் ஆயிருக்கும் ஆனால் அன்றைய இரவுக்கு கொஞ்சம் கருமை அதிகமாகவே இருந்தது போலத் தெரிந்தது.  கையில் லேப்டாப் பையுடன் வேகமாக அந்தப் பார்க்கிங் லாட்டில் அவசரமாக நடந்து கொண்டிருந்தேன். பத்துக்கும் குறைவான கார்களே அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஆள் நடமாட்டமும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. மனதிலும் நடையிலும் வாடகைக்காரை திருப்பிக் கொடுத்து விட்டு வீட்டுக்குத் திரும்ப விமானத்திற்கு சரியான நேரத்துக்குப் போகனும்கிற அவசரம். அந்த இருளின் பயமும் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. என் காரைத் தூரமாக இருந்தே ரிமோட்டால் திறந்து வைத்துக்கொண்டேன்.

  அந்த சாம்பல் நிறக்காரை அடைந்தவுடன் பின் கதவைத் திறந்து வேகமாக லேப்டாப் பையைத் திணித்து கதவை ஓங்கி மூடினேன். அதே வேகத்துடன் ஓட்டுநர் இருக்கையையும் திறந்து உள்ளே நுழைந்தேன். இது மாதிரி இருளான இடங்களில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கும் மக்களோ, கஞ்சா அல்லது ஏதோ ஒரு போதைக்காக இரந்து நிற்கும்   மனிதனோ, பயமுறுத்தும் எண்ணத்துடன் விகார முகத்தைக் கொண்ட ஆணோ பெண்ணோ,  இருப்பார்கள் என்று எனது ரொம்ப நாளைய பயம். காருக்குள் நுழைந்து கதவைச் சாத்தி உள்ளிருந்து பூட்டிய பின்னே மனம் அமைதி அடையும். அது போல அன்றும் காருக்குள் வேகமாக நுழைந்து  கொண்டேன்.

மேப் லைட் இல்லாததால் எந்த சுவிட்ச் எந்தப் பக்கம் இருக்குது ன்னு தெரியல. மெதுவாகத் தடவி தடவி லைட் சுவிட்சை கண்டுபிடித்து ஆன் செய்தாச்சு.  மஞ்சள் நிற வெளிச்சம் படர்ந்த பின் இடது கைப்பக்கம் இருந்த பூட்டு படம் போட்ட பட்டனை அழுத்தி காரைப் பூட்டிய பின் கண்ணை மூடி ஒரு பெருமூச்சு விட்டேன். கண்களை மெதுவாகத் திறந்து தண்ணீர் குடிக்க பாட்டிலைத் தேடும்பொழுது தான் ஏதோ சில வித்தியாசங்களை உணரத் தொடங்கினேன்.

தண்ணீர் குடிக்க வைத்திருந்த நீல நிறக் கண்ணாடி பாட்டிலைக் காணோம். ஆனால் நான் வைக்காத ரெண்டு காலியான நெகிழ்ந்த தண்ணீர் பாட்டில்கள் அந்த ஹோல்டரில் இருந்தன. கண்கள் பரபரவென்று விரிய ஆரம்பித்தன. நான் பாதி படித்து வைத்திருந்த ஜெயமோகனின் அறம் புத்தகத்தைக் காணோம். பக்கத்து இருக்கை மேல் வைத்திருந்த ஞாபகம்..சிப்போட்டிலில் வாங்கி சாப்பிட்டு மீதம் இருந்த சிப்ஸ் இருந்த கவரைக் காணோம்.  வலது பக்கம் திரும்பி பின்னிருக்கையை நோக்கி காலையில் ஹோட்டலில் இருந்து எடுத்து வைத்த எனது ட்ரவல் சூட்கேஸ் இருக்குதான்னு பார்க்கும்பொழுது அது இல்லாமல் சில அலுவலகக் கோப்புகள் இறைந்து கிடந்தது தெரிந்தது. மீண்டும் மனதில் அதே பயம் அதே அவசரம் வேகமாக தொற்றிக் கொண்டது.  வேறு யாரோட காரில் ஏறிவிட்டேன் என்பதைப் புரிந்து கொள்ள நிறைய நேரம் ஆகவில்லை.

காரை விட்டு வேகமாக இறங்கி, பின் கதவைத் திறந்து லேப்டாப் பையை எடுத்து விட்டு அடுத்து நின்ற என் சொந்தக்காருக்கு இல்லை இல்லை வாடகைக்காருக்கு செல்ல மணித்துளிக்கும் குறைவான நேரமே ஆச்சு.
   யாராவது பாத்துடட்டங்களா என்ற பயத்துடன் காரில் இருந்தபடியே எனது பார்வைகள் சுழன்றன.  ஏறக்குறைய ஐம்பது அடி தூரத்தில் அலுவலகத்தின் ஒரு அறையில் இருந்து வந்த  அந்த வெளிச்சத்தையும்  அந்த அறையில் அமர்ந்து மும்முரமாக கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்து கொண்டிருந்த அவரையும் கண்ட பின்பு ஓரளவுக்கு என்னால் யூகிக்க முடிந்தது. அவர் அந்தக் காருக்கு சொந்தக்காரராக இருக்கலாம். கண்ணுல படும்படி வண்டியை அங்கே நிப்பாட்டி வச்சுருக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.  மெதுவா நான் தப்பா ஏறின காரைப் பார்த்தேன். அய்யோ அந்தக் காரைப் பூட்ட மறந்துட்டேனே. லைட்டையும் அணைக்கல. கதவு திறந்திருக்கு. லைட் எரியுது. இப்ப வேகமா ஓடிப் போயி லைட்டை அமத்திட்டு கதவைச் சாத்திட்டு வரலாமா ன்னு யோசிச்சேன். அப்பப் பாக்காதவங்க கதவ மூடறப்ப பாத்தாங்கன்னா என்ன திருடன்னு நினைச்சுடுவாங்களோ… மறுபடியும் ஆபீசுக்குப் போய் செக்யூரிட்டியிடம் போய் சொல்வோமா..  அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் எனக்குத் தெரிந்தவர்களை கூப்பிடலாமா… ன்னு பல உபாயங்களை மனம் போட்டுக் குழப்பி கடைசியில் ஒன்றும் பண்ணாமல் விமான நிலையம் நோக்கி கிளம்பிடுச்சு.

அது ஒரு 43 மைல் பயணம். ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆனது.  நகரின் விளிம்பு வரை வாகன நெருக்கடி அதிகமாகவே இருந்தது. நகரைத் தான்டிய பின், வாகனங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தபின் வண்டியின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்து இருந்தது. ட்ரம்ப் மற்றும் ஹிலாரிக்கும் இடையேயான மூன்று விவாதங்கள் முடிந்து ஒரு வாரம் ஆயிருந்தும் இன்னும் அதைப் பற்றி 360 டிகிரி கோணத்தில் வானொலி நிலையங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தன. 

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சென்ற வாகனங்களின் சத்தங்களும் விளக்கு வெளிச்சங்களும் நாள் முடிந்து அயர்ந்து மயங்கிக் கிடந்த அந்தப் பரந்தக் குறிஞ்சி நிலப்பரப்பைத்  தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தன . .. ஏன் அந்தக் காரின் கதவை நீ மூடவில்லை.?, ஏன் அங்கு யாரிடமும் இது பற்றி சொல்லாமல் வந்தாய்…? அந்தக் கார்க்காரர் பேட்டரி காலியாய்ப் போயிருந்தால் என்ன பண்ணியிருப்பார்?குளிருக்குள் கஷ்டப்பட்டிருப்பாரோ..? வேறு யாராவது அந்தத் திறந்தக் காருக்குள் நுழைந்து திருடி இருப்பார்களோ.?  இந்தக் கேள்விகள் காரைப் பின் தொடர்ந்தது மட்டும் இல்லாமல் 30000 அடி உயரத்தில் பறக்கும் போதும், சன்னலுக்கு வெளியே கண்களை உயர்த்தி, விரல்களைக் கொம்பு போல் வைத்து,  நன்கு விரித்து, முகத்தைச் சாய்த்து, சில்லி ப்போஸ் செய்து என்னையேப் பார்த்துக்கொண்டு இருந்தன..

நாட்கள் கடந்து செல்ல செல்ல , அன்றாட வாழ்வின் போராட்டங்கள் இந்த நினைவுகளை நினைவடுக்குகளில் ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு அட்டைப்பெட்டிக்குள் வைத்து செல்லோ டேப் வைத்து இறுக்கி மூடி வைத்துவிட்டன.

அப்படி அடைக்கப்பட்ட நினைவுகள் அட்டைப் பெட்டியில் அயர்ந்து உறங்குவது இல்லை . மீண்டும் வலிமை பெற ஏதாவது ஒரு வழி பிறக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்குமோ என்னவோ.. அதே குளிர்காலம் முடியும் தருவாயில் நடந்த மற்றொரு நிகழ்வுதான் அப்படி நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு நாள் காலையில் அவசரகதியில் அலுவலகத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். முதுகின் பின் தோள்பட்டையில் தொங்க விடப்பட்ட மடிக்கணினிப்பை, ஒரு கையில்  சாப்பாட்டுப்பை, அதே கையில் ஒரு விரலில் காரின் சாவிக்கொத்து, இன்னொரு கையில் வார இறுதியில் சமைத்து சாப்பிட்ட கறிக்குழம்பின் எஞ்சிய எலும்புத் துண்டுகள், மீன் முட்கள், ஒரு வயசுக்குழந்தையின் ரெண்டு மூனு நாள் டையபர் நிறைந்த குப்பைப்பை. ராத்திரியில் இருந்தே மனைவி “வீட்டுல இருக்க முடியல. காலையில ஆபீஸ் போறப்போ மறக்காம குப்பைய எடுத்திட்டுப் போய் போட்டுப்போங்க “ ன்னு ரெண்டு மூணு தடவை சொல்லிட்டா. ரிமோட்டால் ட்ரங்கை திறந்து கொண்டே அப்பார்ட்மென்டின் மாடியில் இருந்து பரபரப்புடன் இறங்கி வந்து பார்க்கிங் லாட்டை நெருங்கினேன்.  ட்ரங்கின் கதவு  உயரே எழும்பி இருந்தது. குப்பையைப் போட்டுட்டு ஓங்கி மூடினேன்.

ஓட்டுநர் இருக்கை அருகில் சென்று கதவை இழுத்துப் பார்த்தேன். கதவு திறந்து கொடுக்கவில்லை. ரிமோட்டை மீண்டும் இரண்டு முறை அமுக்கிப் பார்த்தேன். பீப் சத்தம் வேறு எங்கோ இருந்து வந்தது. ஓ மை காட்.. இதுவும் வேற கார். சொந்தக்காருக்கு அருகில் சென்று ட்ரங்கைத் திறந்து பார்த்தேன் . மாட்டிக்கொண்டிருந்த ட்ரங்க் கதவு திறந்து உயரே எழும்பியது. அங்கே போட குப்பைப்பை இப்போது இல்ல. அந்தக் கதவைத் திறக்கவும் முடியாது. யாரோ மறந்து போய் ட்ரங்க் கதவைத் திறந்து வச்சுட்டுப் போயிருக்காங்க போல. இப்போ இந்த நாத்தம் புடிச்ச குப்பைப்பை அதுக்குள்ள மாட்டிக்கிடுச்சு…

உபயோகப் படுத்தப்பட்ட  டையபர்  பூமியில் மட்குவது கடினம், 300 வருசம் ஆகும்னு  கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் டையபர் குப்பையை திறந்திருந்த அடுத்தவங்க காரில் போட்டு கதவை அடைச்சுட்டா மறுபடி எடுக்கது ஈசியா சிரமமான்னு யாரும் சொல்லவே இல்லையே.. காரைப் பார்த்தால் ஒரு தேசி கார் மாதிரி  தெரியுது. நம்பர் ப்ளேட் பார்த்தவுடன் அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.  தெலுங்குக்காரர் காரோ இல்லை அந்தப் பஞ்சாபிக் காரரோடதா ..   ரெண்டு இந்திக் காரங்க வேற இருக்காங்க.. எந்த வீட்டுக்காரர் ன்னு நான் எப்படி கண்டுபிடிச்சு   அவங்க கிட்டப் போய், “ஐயம் சாரி. ஐ மிஸ்டேகன்லி புட் மை ஹவுஸ் கார்பேஜ் இன் யுவர் கார். கேன் யூ ப்ளீஸ் ஓபன் யுவர் ட்ரங் ” ன்னு எப்படி கேக்க முடியும்? இதுக்கு எந்தப் பரிகாரமும் கிடையாதுன்னு யோசிச்சு, ஒன்னுமே செய்யாம அப்படியே போட்டுட்டு என் காரில் அலுவலகப் பையையும் சாப்பாட்டுப் பையையும் ஏற்றி நான் அலுவலகம் கிளம்பிட்டே இருந்தேன்.

“லீசிங் ஆபிஸில் கார் நம்பர் சொல்லி போன் நம்பர் வாங்கி பேசியிருக்கலாம். இப்ப என்ன நடந்திருக்குமோ? ட்ரங்க பார்க்காமல் வண்டிய எடுத்துட்டு போயிருந்தார்னா ஆபீஸ் போரப்ப நாத்தம் தெரிஞ்சிருக்காது. ஆனால் சாயங்காலம் வரப்ப அவரால காரில உட்காந்திருக்கவே முடியாதே. அப்ப ட்ரங்க திறந்து பார்த்து குப்பை போட இடம் கண்டுபிடிக்க கஷ்டப்பட்டு கார்லயே வச்சு நகர்வலம் வந்திருப்பாரோ. குளிர் காலம் வேற. சன்னலை திறந்து வச்சும் ஓட்டி இருக்க முடியாதே.. மதியம் சாப்பிட அவர் கூட வேலை பார்க்கவரோட அவர் கார்ல போயிருந்தார்னா என்ன ஆயிந்திருக்கும். . ரெண்டு மூனு நாள் கழிச்சி வண்டி எடுத்திருந்தா ரொம்பவே நாத்தமா இருந்திருக்குமே.. அவர் ஒரு சைவம் சாப்பிடும் ஆச்சாரமான ஆளா இருந்தா மீன் குழம்பு பட்ட காரை என்ன செஞ்சிருப்பார். ”

இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றாக மனதில் எழுந்து ஒரு வாரம் மனதில் மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தது. “என்ன பண்ணியிருந்துக்கனும்” ன்னு நிறைய பேரிடம் கேட்டேன்.



“ட்ரங்கை இனிமேல் திறந்து வைக்காதீர்கள். வைத்தால் இது மாதிரி பல மடங்கு பிரச்சினையை சந்திக்க நேரிடும் “ன்னு எழுதி அந்தக் காரில் ஒட்டச் சொன்னான் ஒரு குறும்புக்கார நண்பன்.









Comments

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் ...

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியி...

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  த...