Skip to main content

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப். 


அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் சிக்காமல் தான் நினைத்ததை அப்படியே செய்பவன் இந்த சம்பத். 



மனைவியுடன் இருக்கும் நண்பனின் காதில் "உன் மனைவி கருத்தடை அணிந்திருக்காளா? இடுப்பு பெரிதாக உள்ளது"  என்று கேட்டுச் சிரிக்கிறான். நண்பனின் கோபத்தை இன்னொரு நண்பன் வழியாக பின்னர் தெரிந்து அதற்கு மன்னிப்பு கேட்கும் முறையும் வழக்கமானதன்று. 


கரையின்றி காட்டாறு ஓடுமாயினும் பூமியை ஒரு பிடிமானமாக வைத்திருப்பதுபோல ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறான்.  லாட்டரிச் சீட்டு, பீர் பாட்டில், அரசியல் மேடை, ஜெயந்தி, தமிழ், கடவுள் மறுப்பு, விபச்சாரி, நட் போல்ட் வணிகம் மற்றும் நர்சரி கார்டன். 


அவன் பிணத்தின் மீது எறும்பு ஊர்வதில் கதை ஆரம்பித்து நண்பர்கள் மற்றும் மனைவி ஜெயந்தி வழியாக முன்னும் பின்னுமாக நகர்கிறது. சிறுவயதில் தங்கை சித்ரா இறந்த சம்பவம், நண்பனுடன் ஊருக்குச் சென்றபோது அப்பாவைத் துரத்தி துரத்தி அடித்தது, நாத்திகப் பிரச்சாரப் புத்தகங்களை விற்க கன்னியாகுமரிக்குத் திடீர் பயணம் செய்தது, யாழினியுடன் நட்பு, யாருக்கும் சொல்லாமல் நடந்த கல்யாணம்,கம்ப ராமாயணத்தை எரித்து பத்து நாட்கள் சிறைவாசம் என கதை விரிகிறது. கலைடாஸ்கோப்பைக் குலுக்கிப் பார்க்கும் ஒவ்வொரு தருணமும் தினுசுதினுசான உருவங்கள். 


சம்பத்தின் கல்யாணம் விடுதியில் லாட்ஜ் ரூம் பாய் நடத்தி வைக்க கடையில் வாங்கிய ஒரு முழுச்சாப்பாட்டுடன் முடிந்தது. நீண்ட மருத்துவமனைவாசத்தில் ஜெயந்தி மட்டுமே  அருகிருந்தாள். நண்பர்கள் சிலநேரங்களில் வந்து போயினர். அம்மா இறந்தது கூட சம்பத்திற்கு தெரிவிக்கப்படவேயில்லை. அவனுடைய சாவுக்கு வந்ததெல்லாம் நண்பர்கள் மட்டுமே. அப்பா,  அக்கா, அக்கா கணவர் என்ற எந்த உறவும் இல்லை. வாழ்க்கை முழுவதும் தனிமை அவனை ஆக்கிரமித்திருந்தது. 


அவன் அக்கா மகள் சித்ராவிற்காக சிறுவர் சைக்கிளை சுமந்து கொண்டு சென்றது மட்டுமே உறவின் மீது வைத்திருந்த ஒரு நூலிழை இணைப்பு. சிறுவயதில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தினால் அவனை துரத்தி வந்த கழிவிரக்கம் இந்த உறவின் மீது பிடிப்பைத் தந்திருக்கலாம். அவனுக்குள் இருக்கும்  குற்ற உணர்ச்சியே அவனை இந்தச் சமூகத்தில் இருந்து ஓதுங்கி வாழச்செய்கிறது என எண்ணச்செய்கிறது. சம்பத்திற்குள் பெரிய மனப்போராட்டம் நடந்திருக்கலாம். ஆனால் கதை சம்பத்தின் வழியாக சொல்லப்படவில்லை. ஆகையால் அது போன்ற அக நிகழ்வுகள் இல்லை. நண்பர்கள் வழியாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு புற நிகழ்வை வைத்து வாசகன் தேடும் அகம் தான் நாவலின் வெற்றி. 


அழகர், ராமமூர்த்தி, மாரியப்பன் , விருப்பம் ஏதுமின்றி இளங்கலை தமிழ் படிக்க வந்தாலும் படித்து முடித்த பின் தங்களுக்குரிய இடத்தை கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி தேடிக்கொண்டனர். சம்பத் விரும்பிப் படித்த தமிழை வைத்து அடுத்த நிலைக்குச் செல்லவில்லை. தீவிரமாகச் செயல்பட்ட அரசியல் களத்திலும் அடுத்த நிலைக்குச் செல்ல முடியவில்லை. அடுத்த படிக்கு ஏறத் தேவையான சூட்சுமங்களோ சமரசங்களோ எதுவும் அவனிடம் இல்லை. 



பத்திரிக்கையில் வேலை செய்யும் போதும்  குற்றச் சம்பவங்களைப் பற்றி நிறைய எழுத வேண்டியிருப்பதை எண்ணி எந்தவித சமரசமும் இன்றி வேலையைத் துறக்கிறான். நர்சரி கார்டன் நடத்தும்போதும் இயற்கையில் வளரும் செடியை விற்க நமக்கு ஏது உரிமை என்றெண்ணி அந்தத் தொழிலையும் கைவிடுகிறான். 


சினிமா, லாட்டரி, அரசியல், காதல் என பொம்மை விட்டு பொம்மை மாறும் குழந்தை போல மாறிக்கொண்டிருக்கிறான். ஏதோ ஒன்று கூட அவனை அடிமைப்படுத்தவில்லை. அவற்றின் வெற்றி தோல்விகள் அவனைப் பாதிக்கவே இல்லை. 


சமரசமற்ற தன்மை, அற உணர்ச்சி, எதிலும் இயங்கும் தீவிரத் தன்மை, தோல்விகளைக் கண்டு துவளாத மனநிலை என்று இதெல்லாம் இருந்தும் எங்கோ வழுக்கிக்கொண்டே இருக்கிறான். சறுக்கியதும் மீண்டும் எழுந்து நடந்து ஓடவும் செய்கிறான். ஆனாலும் எந்த ஊரும் போய்ச் சேரவில்லை. 



கிரெடிட் ஸ்கோர் எழுநூற்றைம்பதிற்கு மேல் நேர்கோடாக இருக்க வேண்டும் என்று அதைத் தெய்வமாகத் தொழும் நமக்கு சம்பத்துடைய கிரெடிட் ஸ்கோர் ஒரு நீண்ட அண்டீஸ் மலைத்தொடராகப் பார்ப்பதில் வியப்பு. சிலநேரங்களில் பொறாமை கூட. 

  

தீப்பெட்டிக்குள் காண்டம் ஒளித்து வைப்பது, தீக்குச்சிகளை முகர்ந்து பார்ப்பது, அக்பர், பாபர், தொல்காப்பியர், ஷேக்ஸ்பியர் ஆகியவர்களின் தொலைபேசி எண்களை எழுதி வைத்த போன்றவை சம்பத்தின் வாழ்வின் விசித்திரமான ரசனைகள். 


நல்ல படிப்பு படித்து நல்ல வேலைக்குப் போனால் தான் பெண் சுகம் கிடைக்குமா என்ற சம்பத்தின் கேள்வி எழுத்தாளர் சமூகத்தை நோக்கிய வினா. 


சாவு வீட்டில் சீட்டு விளையாடுவது என்ற வழமை வாசிப்பதற்கு புதிதாக இருந்தது. லாட்ஜ், எஸ்டிடி பூத் போன்ற இடங்களில் உள்ள நுட்பங்களை கவனித்து எழுதி  அப்படியே பதிவு செய்திருப்பது நல்ல ஒரு நினைவு கூர்தலை ஏற்படுத்தியது. மேலும் இந்த நாவலின் நடை முதலில் இருந்து விறுவிறுப்பைத் தருகிறது. 





Comments

Popular posts from this blog

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  துவாரங்களைப்  பெரிதாக்கினேன். “அதுவும், அதே  வரிசல  மேல இருக்குற அந்த மஞ்சக்கலரயும்  எடுத்துடுங்க “ இந்த முறை உறுதி செய்துவிட்டேன் . அவளே தான் .  திரும்பக் கூடாது.  இந்த இடத்தை  விட்டு அசையாம இதே மாதிரி குனிஞ்சே  உக்கார்ந்துருவோம் . “சத்தியத்தைத்  தேடிக்கொண்டு போகிறவனுக்குத்  துக்கத்தின்  பரிசு தான் எப்போதும் கிடைத்திருக்கிறது . புறக்கணிப்புகள் . மன முறிவுகள் . ஓட ஓட விரட்டல் “ னு  உயிரியல் பூங்காவில்  வாசித்த அதே  குரல்.அவள் எப்போதும்  கைப்பையில்  சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே  சில குறிப்புகள் “  வைத்திருந்த காலம்.  பூங்காவில்  அருகில் உட்கார்ந்து     அவள் கோடு  போட்டு வைத்திருந்த அந்த வரிகளை எனக்காக பலமுறை  வாசித்து காண்பித்து இருக்கிறாள் .    அந்தப் பக்கம் முழுவதும் ஏற்ற  இறக்கத்துடன்   வாசித்து “ கூரைக்  கோழிகள் சிரிக்கக் கூடும் . காகங்கள்  சிரிக்கக்கூடும். சற்றுக் குரூரமான  , கொடுமையான சிரிப்புத்தான்.  அப்போதும் சூரியன