Skip to main content

அனந்தியின் டயறி

  அனந்தியின் டயறி என்பது ஜெர்மனியின் பெர்லின் நகரில் வாழும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர் பொ. கருணாகரமூர்த்தி அவர்கள் எழுதிய ஒரு நூல். இளங்கல்லூரிப் பெண் ஒருத்தியின் பார்வையில் புலம்பெயர் வாழ்க்கையின் அனுபவங்கள்  குறித்து ஒரு வருடத்தின் டயறிக் குறிப்புகளாக எழுதியுள்ளார். 


முதலில் நூலின் வடிவத்தைப் பற்றி சொல்லியாக வேண்டும்.நம் குழந்தைகள் வாசிக்கும் Diary of wimpy kids புத்தகமும் மேலும் பல புத்தகங்களும் எழுத்தாளருக்கு இந்த டயறி வடிவத்தை நோக்கிய ஈர்ப்பை அளித்ததாக முன்னுரையில் கூறியுள்ளார்.


இந்த வடிவம் எழுத்தாளருக்கு ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது. கதை, கவிதை, நகைச்சுவை, முகநூல் குறிப்பு, நூல் அறிமுகம், ஆங்கில மற்றும் ஜெர்மன் வார்த்தைகள் கற்பித்தல் , திரைப்பட அறிமுகம், டிவி தொடர் விமர்சனம், நடன வகுப்பு, பயணக் கட்டுரைகள், சமைய‌ல் குறிப்புகள் என இவற்றின் வழியாக ஒரு புலம்பெயர் வாழ்க்கையை சித்தரிக்க இந்த வடிவம் பெரிதும் உதவியிருக்கிறது. இந்த வடிவம் தமிழுக்கு ஒன்றும் புதிதல்ல. சாருவின் ஜீரோ டிகிரி மற்றும் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் இவைகளும் குறிப்புகளாகவே விரிகிறது. ஜனவரி முதல் தேதியிலிருந்து டிசம்பர் கடைசி தேதி வரை என கால வரிசைப்படி அனுபவங்களை கருணாகரமூர்த்தி அடுக்கியுள்ளார். ஆனால் சாரு  அதற்கு மேல் சென்று காலம் என்ற மையச்சரடையே நீக்கி குறிப்புகளை கலைத்துப் போட்டிருப்பார். நினைவுகளிலிருந்து அனுபவங்கள் வெளிவரும்போது  வகுப்பில் இருந்து மதிய உணவுக்குச்  செல்லும் மாணவர்கள் போல் வரிசையாக வெளிவருவதில்லை.  



எழுத்தாளர் கால வரிசைப் படி அடுக்கிய அனுபவங்களை, வாசகர் கண்ணை மூடி ஏதாவது பக்கம் ஒன்றை புரட்டிப் படிக்க ஆரம்பித்தாலும் அங்கிருந்து இலகுவாக வாசிப்பைத் தொடர முடியும். முன்னுரையில் ஆசிரியர் வாழ்வு சுழன்றும் தொடர்ந்தும் நகர்வதன் காரணமாக நடுவில் இருந்து வாசிக்க ஆரம்பித்தாலும் புதினம் அங்கிருந்து ஆரம்பிப்பது போன்ற பிரமை ஏற்படும் என்கிறார். 


கடினமான மொழியை அதிகம் பயன்படுத்தாமல்  கொஞ்சம் ஈழத்தமிழ், கொஞ்சம் பேச்சுத் தமிழ், ஆங்காங்கே ஆங்கில வார்த்தைகளை அப்படியே வின்டர் விடுமுறை என்பது போல் தமிழ்ப்படுத்தியும் சில இடங்களில் kissing competition என்பதுபோல் அப்படியே ஆங்கில வார்த்தைகளையும் பயன்படுத்தி உள்ளதால் வாசிப்பில் அயர்ச்சி இல்லை. 


சில இடங்களில் ஜெர்மன் வார்த்தைகளை பள்ளிச் சிறாரிடம் இருந்து கற்றுக் கொள்வதுபோல அமைத்திருப்பது ஒரு நுட்பமான பதிவு என எண்ணுகிறேன். அமெரிக்காவிலும் பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளின் பயன்பாடுகளை குழந்தைகள் வாயிலாகவே அறியும் புலம்பெயர்ந்த குடும்பங்கள் இருக்கவே செய்கின்றன. குழந்தை கடம்பனின் வாயிலாக மட்டுமல்லாது பல இடங்களில் பூர்வீக மக்கள் பேசுவதிலும் உள்ள சில வார்த்தைகளை அப்படியே எழுதியிருக்கிறார். 


புதிதாக கற்றுக் கொண்ட ஆங்கில வார்த்தைகள் என ஆங்காங்கே தூவியிருப்பது ஒரு டயறியின் யதார்த்த பக்கத்தைக் காண்பிக்கிறது. ஆங்கில வார்த்தை மட்டும் அன்றி மனதைப் பாதித்த கவிதைகளையும் ஆங்காங்கே காண்பித்து செல்கிறார். 


மலம் அள்ளி வயிற்றைக் கழுவும் 

அந்த ஆத்தாவுக்கு

சோற்றாங் கை எது ? 

பீச்சாங்கை எது ? 


கலீல் ஜிப்ரானின் புகழ்பெற்ற கவிதையொன்றை ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் மொழிபெயர்த்து வைத்திருக்கிறார். ஆசிரியர் சிறுபத்திரிகைகளில்  எழுதிய கவிதைகளையும் அனந்தியின் டயறி யில் அவளுக்கு பிடித்த கவிதைகளாக குறிப்பேற்றியுள்ளார். 


ஆசிரியர் அவர்கள் படைப்பாளி என்பதைவிட  தீவிரமான வாசகராக இருக்கிறார். அவர் பிடித்து படித்த புத்தகங்களையும் சிலநேரங்களில் அவற்றைப் பற்றிய ஒரு வரி விமர்சனத்தையும் மற்ற குறிப்புகளுடன் கலந்திருக்கிறார். சுஜாதாவின் கடவுள் இருக்கிறாரா?, ராகுல் சாங்கிருத்யாயனின் "வால்காவிலிருந்து கங்கா வரை", Maxim Gorkyயின் "தாய்", K. Jerome இன் Idle Thoughts, Jacqueline Wilson யின் "Glubbslyme", Townsend Sue என்பவர் எழுதிய Adiran Mole from Minor to Major'   என்றொரு Satire வகை நாவல், Gabriel García Márquez என்ற இலத்தீன் எழுத்தாளரின் Memories of My Melancholy Whores, Earnest Hemingway யின் The Snows of Kilimanjaro, Antonie de Saint யின் Little Prince, யூமாவாசுகியின் 'மஞ்சள் வெயில்' என பட்டியல் நீண்டு செல்கிறது. இது போன்று சில திரைப்படங்களைக் குறித்தும் எழுதிச் செல்கிறார். Beautiful என்ற கொரியன் திரைப்படத்தை பற்றி எழுதியிருப்பது படத்தைப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. 


பெர்லினில் வாழும் தமிழ்ச் சமுதாயத்தைப் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை.  வீடு வாங்கினால் கிடைக்கும் அரசு உதவியைப் பெரிதாகச்  சொல்லி வீடு வாங்க வைக்கும் நண்பர் என்ற போர்வையில் வரும் வீடு விற்க வரும் வீட்டுத் தரகர். அனந்தியின் அப்பா காளிதாஸ் அவர்களை தொலைபேசியில் அழைத்து லண்டனில் படிக்கும் தன் பெறாத மகனின் மாணவ விசா முடிவதால் ஏதாவது கல்யாணம் பண்ணி விசா வாங்கலாம் என்று யோசித்து அனந்தியைப் பெண் கேட்கும் கதை. அதற்கு அவரின் பகடிப் பதில். நார்வேயில் ஒரு கல்யாணத்திற்கு சென்று திரும்பும் வழியில் பெர்லினில் அனந்தியின் வீட்டில் தங்கிவிட்டு சுவிட்சர்லாந்து செல்லும் சிவரமணன் மற்றும் அவர் நண்பர் குழாம். Asbach போத்தலைக் கவிழ்த்து விட்டு நிலவறையிலே ஆங்காங்கே தூங்கி எழுந்து சென்ற குழாம், வடலியடைப்பு கடைக்கு காய்கறி வாங்க வரும்போது  அனந்தியின் வீட்டில் வந்து  ஆற அமர்ந்து தேநீர் அருந்தி விட்டுச் செல்லும் நண்பர்கள் கூட்டம். வடலியடைப்பு கடைக்காரர் சேகரிடம் "வன்சூரன் என்ன விலை?"  என்று மீன் விலை கேட்கும் வாடிக்கையாளரிடம் வாங்குற ஆளுக்கு விலை சொல்லுவோம் என்ற பகடி கலந்த பதில். இன்னொரு புறம் குடும்பத்துடன் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி ஆடம்பரமாக  கொண்டாடப்பட்ட பூப்புனித விழா. கோடைகாலத்தில் குளிர்கால ஆடைகளை அடிபாதாள விலையில் வாங்கும் குடும்பம். சீட்டுப் பிரித்த பெண்மணி சீட்டு முறிந்து விட்டது என்று திடீரென தலைமறைவு. சிபாரிசு செய்த கடமைக்கு பொறுப்பேற்று தானே அந்தப் பணங்களைத் திருப்பிக் கொடுக்கும் மற்றொரு குடும்பம். கருணாமூர்த்தி அவர்கள் இது போன்று பல கதாபாத்திரங்களை வைத்து நுட்பமான தகவல்களைக் கொண்டு ஐரோப்பிய மண்ணில் ஆழப் பதிந்திருக்கும் புலம் பெயர்ந்த சமூகத்தையும் அவர்களுக்குள்ளான தாம்புக்கயிறு போன்ற உறவுப் பாலங்களையும் நன்கு சித்தரித்துள்ளார். இதுவே அவருடைய முதன்மை நோக்கமாகக் கூட இருந்திருக்கக்கூடும். நுட்பமான தரவுகளை வைத்து ஒரு பெருஞ்சமூகத்தின் வண்ணங்கள் நிறைந்த வாழ்வை எவ்வித சமரசமும் இன்றி எழுதியிருப்பதால் இது ஒரு இலக்கியத்தரம் பெறுகிறது. கலைடாஸ்கோப்பில் உள்ள சில்லுகளை மைக்ரோஸ்கோப் வைத்து பார்த்த அனுபவம் அது. பகடியையும் சுய எள்ளல்களையும் அது வழியாக பார்க்கமுடிகிறது. 


தாயகத்தைப் பற்றிய வெகுசில குறிப்புகள் இருந்தாலும் பெர்லினில் எழுத்தாளர் பெற்ற அனுபவங்களையே எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. புலம்பெயர் இலக்கியத்தின் முக்கியமான தேவையும் கூட. தாயகத்தைப் பற்றி முழுவதும் பேசாமல், வந்த இடத்தில் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நிறைய எழுதியிருந்தாலும் அது நிறைவுபெறுவதில்லை. அங்கு வாழும் பூர்வீக மக்களின் வாழ்க்கையை அவதானித்ததை எழுதியிருப்பது ஒரு சிறப்பு அம்சம். 


அனந்தியின் ஆசிரிய பெருமக்கள். அவளை விரட்டி விரட்டி விரும்பும் மாறியோ, மாறியோவுக்கு தமிழ்க் கலாச்சாரம் சொல்லிக்கொடுக்கும் அனந்தி. முதியோர் ஒருவரின் வீட்டுக்கு வழக்கமாகச் சென்று சேவை செய்யும் அனந்தியின் தன்னார்வம். அங்கு அவள் கற்றுக் கொள்ளும் ஜெர்மானிய உணவு வகைகளும் அவற்றின் செய்முறைகளும். அந்தப் பாட்டிக்கு அவள் பரிமாறும் ஈழத்து உணவு. பாட்டி கொடுக்கும் பரிசுக் கவரை அவர் முன்னாடியே அனந்தியை திறக்கச்சொல்லும் அனந்தியின் அப்பா, பார்க்கர் என்னும் அமெரிக்க மாணவன் Student exchange Program மூலம் ஜெர்மனில் அனந்தியின் வீட்டில் வந்து தங்கிப் படிப்பது என கலாச்சாரங்கள் கலக்கும் இடத்தை பதிவு செய்திருப்பது நூலுக்கு ஒரு முழுமைத்தன்மையை அளிக்கிறது. 


 அவள் பார்க்கும் "சொல்வதெல்லாம் உண்மை" போன்ற டிவி நிகழ்ச்சி Maury show. அங்கு வழக்காக வரும்  ஜெர்மானிய குடும்பங்களுக்குள் நடக்கும் பிரச்சினைகள் அனந்தியின் டயறிக் குறிப்புகள் வழியாக வருபது அவள் வயதிற்கு ஒத்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஆசிரியர் அவர்கள் முன்னுரையிலே அனந்தியின் குறிப்புகள் ஒழுக்க நெறியில் இருந்து தவறி இருக்குமாயின் மன்னிக்க வேண்டியிருப்பது அவரும் இந்த வயதிற்கு ஒவ்வாத குறிப்புகளை அறிந்தே வைத்திருக்கிறார் என்று புலப்படுகிறது. விஜய் டிவிக்கு அனுப்பிய கடிதமும் அவளுடைய வயதை மீறிய சிந்தனை போல் தெரிகிறது. Adiran Mole From Minor to Major நாவலும் 17 வயது மகளின் வாசிப்புலகத்தில் இருப்பது சிறிது தடுமாற்றத்தை எனக்குள் உண்டுபண்ணுகிறது. ஒரு மதலையின் தீற்றப்படாத குதலைப் பேச்செனக் கொள்வோம். படைப்பாளி  படைப்பிலிருந்து விலகி அவரின் குறிப்புகளையும் கலந்திருக்கிறார் எனவும் எண்ணலாம். விலகி என்பதைவிட குழம்பி என்றும்  கருதிக்கொள்ளலாம். 


புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் வாசிப்புகள், படைப்புகள், முகநூல் குறிப்புகள் இன்னும் செயற்கைக்கோளாய் தாயகத்தை நோக்கியே உள்ளன. வெகுசில எழுத்துக்களே வாழும் இடத்தை அவதானிக்கிறது. அ. முத்துலிங்கம் அவர்களின் எழுத்து பலதரப்பட்ட நாட்டுமக்களுடன் அவர் அனுபவங்களைத் தொகுத்தது.  ராஜி ராமச்சந்திரன் எழுதிய அம்மா வருவாயா என்பதும் இந்த வகையைச் சார்ந்தது. 


அணிந்துரை இப்படிச் சொல்கிறது. கருணாகரமூர்த்தி, 'அனந்தியின் டயறி' என்ற வடிவில் ஜெர்மன் வாழ் புலம்பெயர் தமிழர் சித்திரத்தை ஒரு புதினம் என்று சொல்லி தந்திருக்கிறார். எந்த புதினமும், கற்பனை என்று என்னதான் சொல்லிக்கொண்டாலும், அது முழுதும் கற்பனை அல்ல;வாழ்வின் நிதர்சனம் பெறும் சுதந்திர வடிவம் அது. 





Comments

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் சிக்காமல்

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  துவாரங்களைப்  பெரிதாக்கினேன். “அதுவும், அதே  வரிசல  மேல இருக்குற அந்த மஞ்சக்கலரயும்  எடுத்துடுங்க “ இந்த முறை உறுதி செய்துவிட்டேன் . அவளே தான் .  திரும்பக் கூடாது.  இந்த இடத்தை  விட்டு அசையாம இதே மாதிரி குனிஞ்சே  உக்கார்ந்துருவோம் . “சத்தியத்தைத்  தேடிக்கொண்டு போகிறவனுக்குத்  துக்கத்தின்  பரிசு தான் எப்போதும் கிடைத்திருக்கிறது . புறக்கணிப்புகள் . மன முறிவுகள் . ஓட ஓட விரட்டல் “ னு  உயிரியல் பூங்காவில்  வாசித்த அதே  குரல்.அவள் எப்போதும்  கைப்பையில்  சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே  சில குறிப்புகள் “  வைத்திருந்த காலம்.  பூங்காவில்  அருகில் உட்கார்ந்து     அவள் கோடு  போட்டு வைத்திருந்த அந்த வரிகளை எனக்காக பலமுறை  வாசித்து காண்பித்து இருக்கிறாள் .    அந்தப் பக்கம் முழுவதும் ஏற்ற  இறக்கத்துடன்   வாசித்து “ கூரைக்  கோழிகள் சிரிக்கக் கூடும் . காகங்கள்  சிரிக்கக்கூடும். சற்றுக் குரூரமான  , கொடுமையான சிரிப்புத்தான்.  அப்போதும் சூரியன