Skip to main content

மானுடம் வெல்லும்

கொல்லைகள் வறண்டு போயிருந்த நவம்பர் மாதம். குளிர் தாங்கும் தடித்த உடைகளுக்கு மக்கள் மாறிக்கொண்டிருந்தனர். நன்றி தெரிவிக்கும் சீசன் களை கட்ட ஆரம்பித்து ஒரு வாரம் இருக்கும் . பெரும்பாலான மக்கள் சொந்த பந்தங்களை நேரில் கண்டு அவர்களோடு விழாவை விமரிசையாகக் கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.  பலசரக்குக் கடைகளில் குமிந்த கூட்டம் வண்டி நிறைய பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தது.

சிறுவர்களின் கைகளில் வண்ணப்படுத்தப்பட்ட காகித வான்கோழி, இறகுகளால் செய்யப்பட்ட தொப்பி, சிறு கொட்டு போன்ற அவர்களது படைப்புகள். “ஒன் லிட்டில் ட்டூ லிட்டில் த்ரீ லிட்டில் இன்டியன்ஸ்“  போன்ற நர்சரிப் பாட்டுகள். “ செவ்விந்தியர்கள் காலால் நடந்து வெகுதூரம் சென்றனர். அவர்களுக்குத் தேவையான படகுகளை அவரே செய்தனர். வேட்டையாடியும் விவசாயம் செய்தும் உணவுகளைப் பெற்றுக் கொண்டனர். மேலு‌ம் மூலிகைகளை மருந்தாகப் பயன்படுத்தினர் ” என்று ஆய்வறிக்கைகள் ஒருபக்கம். இன்னொரு சிறுவர் கூட்டம் வான்கோழிகளைப் பற்றியும்    செவ்விந்தியர்களைப் பற்றியும் விழாக் கொண்டாட்டங்கள் பற்றியும் இலக்கியங்களை படித்தும் எழுதியும் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர்.

பேருந்து நிறுத்தத்தில் அம்மாக்கள் கூடிப் பேசி தலைக்கு இவ்வளவு என்று முடிவு செய்து காசுகளை சேகரித்து பேருந்து ஓட்டுநருக்கு இனாம் கொடுத்தல் ஒருபக்கம். மலர்க்கொத்துகளையும்  அத்துடன் சிறுபரிசுகளையும் ஆசிரியர்களுக்கு கொடுத்துவிடல் ஒருபக்கம்.

அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் நண்பர்களுடனும் விருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஜெகஜோதியாக நடந்து முடிந்திருந்தன. விருந்துகளில் பெருமிதங்கள், சாதனைகள், எள்ளல்கள் மற்றும் சிரிப்புகளும் பரிமாறப்பட்டன.

அலுவலகங்களில் நிறைய இருக்கைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காங்கே இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஆகச்சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும் பொருட்களைப் பட்டியலிட்டுக் கொண்டிருந்தனர். இருந்த கொஞ்சம் வேலைகளையும் பார்க்கச் சரியான ஆட்கள் இல்லாமல் வேலைகள் சுனங்கிக் கிடந்தது. வேலையைக் கொடுத்த கஸ்டமர் பக்கமும் கேட்பாரில்லை.

போன வருசம் அடிச்சு புடிச்சு கடைக்குள்ள முதலாளா போய் டோர் பஸ்டரை எடுத்த சாதனையின் ஜம்பம்.

“நான் ஒரு கேமரா வாங்கியிருக்கேன். பாத்துட்டே இருப்பேன். இன்னும் குறைஞ்ச விலைக்குக் கிடைச்சா ப்ரைஸ் மேட்ச் பண்ண வழி இருக்கான்னு பார்ப்பேன் . முடியலனா இதைக் கொடுத்துட்டு அதை வாங்கிடுவேன். “

“போன வருசம் வெள்ளிக்கிழமை அன்னைக்கு கடைக்குப் போனா கடையே காலியாயிருந்தது. அப்புறம் தான் வியாழக்கிழமை சாயங்காலமே போகனும்னு தெரிஞ்சுது “ என்ற ஏமாற்றம்.

“நான் வருசா வருசம் இந்த சீசன்ல நிறைய பொம்ம வாங்கி காராஜ் ல போட்டுடுவேன். அப்புறம் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் போறப்ப ஒவ்வொன்னு எடுத்துப்பேன்” என்ற கொள்கை விளக்கம்.

அன்றும் நல்ல குளிர். காருக்குள் செயற்கையாக ஏற்றப்பட்ட வெட்கை கண்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொஞ்சம் எரிய ஆரம்பிச்சிருந்தது. கைகள் நன்றாக காய்ந்து ஈரப்பசை அன்றி மொளிகளில் தெரிந்த வெண்ணிறத் திட்டுக்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது தேய்க்க மறந்த எண்ணெயை நினைவுபடுத்தின. வெகுநேரம் தேடித் துழாவி  பையன் நீண்ட நாளாக ஆசையாய்க் கேட்ட  தூரமாய்ப் பீச்சிடும் தண்ணீர்த் துப்பாக்கியை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு அப்பாவும் பையனும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். கடையில் இருந்து காரை நோக்கிய ஓட்டம். உடலைச் சுற்றி கனத்த உடைகள். கைகள் இறுக்கமாக பைகளுக்குள் . பாவப்பட்ட முகங்கள் மட்டும் குளிரின் நேரடித் தாக்குதலில்.

வீடு திரும்பும் வழியில் அந்த புகழ்பெற்ற ஃபாஸ்ட் ஃபுட்  பார்த்தவுடன் பையனுக்கு சிக்கன் ஆசை வந்து அப்பாவிடம் வேண்டினான்.விடுமுறை தின இரவுச்  சாப்பாட்டு நேரம் என்பதால் வழமைக்கு மாறான கூட்டம். ட்ரைவ் த்ரூ வரிசையில் மெயின் ரோடு வரைக்கும் வண்டி.  பையன் சிக்கன் கேட்டதால் மோகனும் காரை  அந்த கடையை நோக்கி ஓட்டினான். ஸ்லாத்தை  விட மெதுவாக  வரிசை அசைந்து கொண்டிருந்தது.

“அப்பா,   ப்ரவீன் வீட்டுல இதே மாதிரி ஒன்னு இருக்குதப்பா. நான் இத வச்சு ப்ரவீனோட   ஒரு நாள் சண்ட போட்டு விளையாடனும்பா. ப்ளீஸ் ப்ளீஸ் “

“ஓகே டா கண்ணு. அவங்கள வீட்டுக்கு ஒரு நாள் கூப்பிடுவோம் “

“நான் தான் ஜெயிப்பேன். இது தான் பெரிசுப்பா”

அவர்கள் பேச்சு முழுவதும் அந்தப் புதிதாக வாங்கிய  துப்பாக்கியைப் பற்றியே இருந்தது. கொஞ்சம் நேரம் கழித்து வண்டி மெதுவாக அந்த ஆளுயர மெனு பக்கம் வந்தது. அங்கிருந்த வந்த சிப்பந்தியின் கனிவுக் குரல் என்ன சாப்பிட வேண்டும் என்று வினவியது.  இந்த ஊருக்கு வந்து எட்டு வருஷம் ஆனபிறகும் முகத்தைக் காண்பிக்காத இந்தக் குரலிடம் அவன் வாங்க நினைத்ததை  சொல்லி சரியாக வாங்கி வந்த சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு. கேட்டது ஒன்று கிடைப்பது இன்னொன்று . அவனுடைய ஆங்கிலப் புலமை அப்படி.

புராண காலத்தின் அசரிரீ ஒரு ஒருவழிப் பாதை. நமக்கு என்ன வேண்டும் என்று கேட்பதில்லை. அது அதன் விருப்பத்தைச் சொல்லி மறையும். இது இந்த நவீன யுகத்தின் அசரிரீ. நமது விருப்பத்தைக் கேட்டபின் அடுத்தச் சன்னலுக்கு வரச் சொல்லும். அது வரை அருவமாயிருந்தது சன்னலில் உருவத்தை காண்பிக்கும்.

“இஸ் தட் ஆல்? ” “செகன்ட் விண்டோ ப்ளீஸ்”. சலிக்காமல் திரும்ப திரும்ப அதே வார்த்தைகள் உச்சரிப்பு மாறாமல். புதுமைப்பித்தனின் “இது மிஷின் யுகம்” கிருஷ்ணனின்  குரல்.

அந்தச் சன்னலுக்குச் சென்ற பின்  கண்ட அந்த முகத்தின் புன்னகை அந்தக் குரலின் கனிவை உறுதிபடுத்தியது. காலேஜ் போகிற வயதுப் பெண் அவள். அவன் க்ரிடிட் கார்ட் கொடுக்கறதுக்கு முன்னால் அவள் ஏதோ சொல்லிக்கொண்டே அந்தச் சாப்பாட்டை அவனிடம் நீட்டினாள். அது பழக்கமான வார்த்தைகள் அல்ல. கண்களை உயர்த்தியதைக் கண்டு அவள் மீண்டும் பொறுமையாக உச்சரித்தாள்.

“யுவர் ஃபுட் ஹேஸ் பீன் பெய்ட் ஃபார்”

இப்பொழுது வார்த்தைகள் புரிந்தன ஆனால் இன்னும் அர்த்தம் புரியவில்லை. யாரோ ஒருவர் அவன் சாப்பாட்டுக்குக் காசு கொடுத்துவிட்டார். அன்று காலையில் ஒரு  மூதாட்டி  வரிசையில் அடுத்து நின்றவர் வாங்கிய உணவுக்கும் சேர்த்து காசு கொடுத்து ஆரம்பித்து வைத்த இந்தச் சங்கிலி அறுபடாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அவள் விளக்கிய பின் தெளிய ஆரம்பித்தது.

அவன் அடுத்த உரையாடலை ஆரம்பிக்கும் முன் அவள் “ டூ யூ வான்ட் பேய் ஃபார்வர்டு “. இம்முறை புரிய நேரம் எடுக்கவில்லை. உடனடியாக பருத்த புன்னகையுடன்  “யெஸ்”. அவன் வாங்கிய சாப்பாட்டுக்குக் காசு கொடுத்த அந்த முந்தையக் காரை அவன் கண்கள் தேடின. அது வாகன நெருக்கடியில் எங்கோ கானாமல் போயிருந்தது.

பையன் கையில் கிடைத்த சாப்பாட்டுப் பொட்டலத்தை உடனே திறந்து சாப்பிட ஆரம்பித்திருந்தான். காரின் உள்ளே சுழன்ற இனம் தெரியாத பெயர் தெரியாத  முகம் தெரியாத யாரோ ஒருவர் வாங்கிக் கொடுத்த சிக்கனின் வாசம் மோகனுக்கு ஒரு புதுத்தெம்பைக் கொடுத்துக்கொண்டிருந்தது.அடுத்து வந்த நாட்களில் பேசுவது, நடப்பது, படிப்பது, அலுவலக வேலை என எல்லாவற்றிலும் கொஞ்சம் உத்வேகம் அதிகமாயிற்று.

இரவு நேரங்களிலும் தனிமை நேரங்களிலும் அந்த நிகழ்வைப் பற்றிய சிந்தனைகள். கண்ணுக்குப் புலப்படாத அந்த மாபெரும் சங்கிலி. மானுடச்சங்கிலிகள் பல பரிணாமங்களில் பல ஆழங்களில் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. அவைகளுக்கு ஆதியும் கிடையாது அந்தமும் கிடையாது. அந்தப் பின்னல்களில் இருந்து ஒரு தொடரைத் தனியே எடுக்கவும் முடியாது. ஒரு கண்ணி மட்டும் தனியே அல்ல. அந்தத் தொடரில் அவன் அன்று ஒரு கண்ணி. இந்தச் சங்கிலி அறுபடும் என அவனுக்கு நம்பிக்கை இல்லை. இந்தச் சங்கிலிகளில் மனிதம் ஒவ்வொரு கண்ணி வழியாக கடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்.
  
நண்பர்களிடம் இது பற்றி பேசும்போதும் தனி உற்சாகம். ஆனால் இவனை ஒத்துப் போனது யாரும் இல்லை.

“ப்ராட்டிக்கலி இம்பாசிபிள் . அது என்னைக்கோ நின்றுருக்கும். நீ நினைக்க மாதிரி உலகம் இது இல்லை “

“நீ உடைச்சிருப்பியா”

“கண்டிப்பா இல்லை “

“அப்போ நீ வேற உலகம் வேறவா? “

இன்னொரு நண்பர் இணைந்தார்.

“அது இல்லடா மோகு. அந்தக் கடை எப்பவுமா பிசியா இருக்கும். சாயங்காலம் மூனு மணி பக்கம். நான் தான் கடைசிக் கார். நான் என்ன பண்ணுவேன். ராத்திரி கடைசி காரா இருந்தா கம்யூட்டர் என்ன பண்ணும். அந்தக் கடையில வேலை பார்க்கிறவங்களுக்கு சில விதிமுற   இருக்கும். இதுல ஏதாவது ஒன்னு நீ சொல்ற சங்கிலியை உடச்சிடும் .  “

“க்ரிடிட் கார்ட், கடையில் உள்ள கம்ப்யூட்டர், பணியிட ஒழுங்குகள், இவையெல்லாம் மனிதனால் படைக்கப்பட்டவை. இவைகள் மனிதம் தளைக்க முட்டுக்கட்டையாக இருக்காது. அப்படி இருந்தால் மனிதன் தோற்றுவிட்டான் என்று அர்த்தம். மானுடத்தை ஒரு சங்கிலி வளை அடுத்த வளையத்துக்கு கொண்டு செல்ல அதிகாரம் தேவையில்லை. அப்படியே இருந்தாலும் அந்தக் கடையில் உச்ச அதிகாரம் பெற்றுவரும் மனிதனே. மனிதகுலத்தின் ஒவ்வொரு அங்கமும் மானுடம் உயிர்ப்புடன் இருக்க கடும்பாடுபடும்.மானுடம் இல்லாமல் மனிதகுலம் ஒரு நாள் என்ன ஒரு மணிநேரம் கூட பிழைக்காது. “

ஒவ்வொருத்தர் கேள்வியும் வித்தியாசமானது.
“ நாலு ரூபா மட்டும் வைச்சிருக்கவன் இருவது ரூபா கொடுக்கற மாதிரி இருந்தா என்ன பண்ணுவான் “

சிறிது நேரம் யோசித்தபின் மோகன் “ தர்க்கரீதியாகவும் கோட்பாட்டுரீதியாகவும் மனிதத்தை அனுகமுடியாது. அது மகத்தானது. “  என்று ஆரம்பித்து ஊரில் கஷ்டப்பட்ட கீரைப்பாட்டி யாருக்கோ சும்மா கொடுத்த கீரைக் கதை, படிக்காத பிள்ளைங்க வீட்டில இருக்கும்போது பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுக்கு படிக்க காசு கொடுத்த கதை ன்னு தெரிந்த கதைகளைச் சொல்லி முடித்தான். உணர்ச்சி பிறழ்ச்சி. வாய் குளறல். தெளிவற்ற உடைந்து போன வார்த்தைகள். கேள்வியும் பதிலும் பொருந்தாதத் தன்மை. நீண்ட மௌனம்.
கூட்டத்தின் குரல்கள் அமைதியை உடைத்தன.

“நம்பிக்கை இருக்கவேண்டியது தான். இது கண்மூடித்தனமான நம்பிக்கை மோகா. ப்ராட்டிக்கலா யோசி“

“நீ வாங்கின சாப்பாட்டுக்கு மேல ரெண்டு டாலர் கொடுத்ததுக்காடா இவ்ளோ தத்துவம். அறுவாத சங்கிலி. அணையாத தீபம், வற்றாத ஜீவ ஊற்று… தாங்க முடியல டா”

“ஏதோ தேங்ஸ் கிவ்விங்காக யாரோ ஒரு பாட்டி ஆரம்பிச்சது, ஒரு மாசம் தாண்டிடுச்சு. இன்னுமாடா ஓடும்? “

“இந்தச் சங்கிலி உடைஞ்சா மனிதம் உடைஞ்சுடுமா என்ன? எனக்கு மனிதம் மேல எல்லாம் நம்பிக்கை இருக்கு. ஆனா இந்தச் சங்கிலி மேல தான் நம்பிக்கை இல்லை “

கூட்டம் அந்தக் கடைக்கே நேராய்ப் போய்ப் பார்த்துடலாம்னு முடிவு பண்ண பிறகுதான் மோகன் தெளிவானான்.  மானுடத்திற்கு வந்த சோதனை . அது  உரைகல் மீது ஏறி புன்னகை செய்து கொண்டிருக்கிறது  . இடுக்கண் வருங்கால் நகுக போல். மொத்தம் ஏழு பேர். காரில் ஒரே கூச்சலும் கொண்டாட்டமும். 

“எல்லாரும் வயிறு நிறைய சாப்பிட நல்லா வாங்கிக்குங்க. யாரோ தான் காசு கொடுக்கற போறாங்க “

“ஓ ஆமாம்பா .. மறந்தே போயிட்டேன். ராத்திரிக்கும் சேர்த்து வாங்கிடவேண்டியதான் “

“வீட்டுக்கும் சேர்த்து வாங்கிடலாமோ”

இந்த முறை கடையில் அவ்வளவு கூட்டம் இல்லை. முன்னாடி உள்ள காரில் ஒரே ஒருவர் மட்டுமே உட்கார்ந்திருப்பது போல் தெரிந்தது. வண்டி அந்த ஆளுயர மெனு முன் வந்து சேர்ந்தது.

  அந்த அருவத்தின் குரல்
“திஸ் இஸ் கிர்க். வெல்கம் டூ சிக் ஃப்லே. ஹௌ மே ஐ சர்வ் யூ”  . இந்த முறை அந்தக் கனிவைக் காணவில்லை.  ஓட்டுநர் இருக்கையில் இருந்த அந்த நண்பர் காருக்குள் ஏற்கனவே முடிவு பண்ணியிருந்த பட்டியலை ஒப்பித்தார். மொத்தம் ஏழு பர்கர் செட்.

“ஃபோர்ட்டி செவன் ட்வென்டி ஃபைவ். செகன்ட் விண்டோ ப்ளீஸ்”

காருக்குள் மீண்டும் கலகலப்பு. “செத்தான்டா சேகர். நாப்பத்தெட்டு டாலர் “. குசும்புக்கார நண்பர் முந்தைய காரின் ரிவர் வியூ மிர்ரரைப் பார்த்து ஒரு கும்புடு போட்டார். மோகன் இன்னும் நம்பியிருந்தான்.பல முயற்சிகள் செய்தும் யாராலும் முந்தைய காரின் ஓட்டுநரின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. “ஹோண்டா சிவிக் “ என்பது மட்டுமே தெளிவாகத் தெரிந்தது.

அந்த இரண்டாவது சன்னலில் “யுவர் ஃபுட் ஹேஸ் பீன் பெய்ட் ஃபார் “ ன்னு சொல்லி கிர்க் சாப்பாட்டுப்பையைக் கொடுத்தார்.

பிரபஞ்சன் சொன்னது மிகச்சரி.. மானுடம் வெல்லும்.


Comments

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் ...

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியி...

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  த...