Skip to main content

புது மனைப் புகு விழா

நண்பன் ஒருவன் புது மனைப் புகு விழாவிற்கு அழைத்திருந்தான். 2000 சதுர அடியில் கூடுவாஞ்சேரி பக்கம் ஒரு பெரிய தனி வீடு கட்டியிருக்கான். ரெண்டு பஸ் மாறி பஸ் ஸ்டாப் ல இறங்கி ஒரு பர்லாங் நடந்து போய் சேர்ந்தேன். நிறய பேரை கூப்பிடலைன்னு அங்கே போன பின்புதான் தெரிய வந்தது. காதைக் கிழிக்கும் சத்தத்தில் இல்லாமல் " பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோலமயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே" என்று டி. எம். எஸ் மிதமான சத்தத்தில் பாடிக் கொண்டிருந்தார் .
தோரணத்திற்கு கட்டி இருந்த வாழை மரத்துக்கு பக்கத்துல செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே போனேன். நண்பனும் அவனோட மனைவியும் "வாங்க" ன்னு இரு கரம் குவித்து வரவேற்றனர் . "தச்சு கழிச்சாச்சா" ன்னு
விசாரிச்சேன் . " 4 மணிக்கே முடிஞ்சுது " ன்னு சொன்னாங்க.
ஊரில் இருந்து வந்த உறவினர்களை அவர்கள் கட்டிய வேட்டி அடையாளம் காண்பித்துக் கொண்டிருந்தது . அவர்கள் ஒவ்வொருவரும் சுறுசுறுப்பாக ஏதோ ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்த பரபரப்பைக் காண முடிந்தது . பார்த்த எல்லாருடைய கைகளில் சந்தானம் தாரளமாக அள்ளி பூசப் பட்டிருந்தது. கொஞ்ச ஆண்கள் மதிய சாப்பாட்டுக்கு காய்கறி நறுக்கி கொண்டிருந்தனர் .
மெயின் ஹாலின் இன்னொரு ஓரத்தில் ரெண்டு பெண்கள் தேங்காய் துருவிக் கொண்டிருந்தனர் . அதே ஹால்-ல ஒரு ஓரத்தில் குத்து விளக்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்தது . விளக்குக்கு பக்கத்தில் சொந்தக்காரங்க கொண்டு வந்த வாழைத் தார்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சந்தனக் கிண்ணமும் வெள்ளி குங்குமச் சிமிழும் வைக்கப் பட்டிருந்தது . நானும் சாமி கும்பிட்டு இரண்டு கைகளிலும் சந்தானம் தடவிக் கொண்டேன் .
நண்பன் "வா" என்று ஒவ்வொரு அறையாக சுற்றிக் காண்பிக்க ஆரம்பித்தான். முதலில் மாடிப் படி ஏறி மாடியை அடைந்தோம் . மாடிப் படியில் கைப்பிடி சுவரில் புதிதாக அடிக்கப்பட்ட சுண்ணாம்பு பல்லிளித்துக் கொண்டிருந்தது .
மாடியில் குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர் . மாடியின் ஓரத்தில் ஒரு பெரிய வட்டுப் பெட்டியில் எச்சி இலைகள் குமிக்கப் பட்டிருந்தன. இலைகளின் ஓரத்தில் சாப்பிட்டு மீதம் வைக்கப்பட்ட பாதி இட்லிகள் சாம்பாரில் நனைந்து ஊறிப் போய் இருந்தன . மாடியில் இருந்து பக்கத்தில் புதிதாகக்குடியேறிய வீடுகளின் மாடிகளை நோட்டம் இட்டேன் . உள்ளாடைகளும் வெளியாடைகளும் தேசியக் கொடி போல பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தன.
கீழே இறங்கி சமையல் அறைக்கு அழைத்து சென்றார் . அங்கே ஒதுங்க இடம் இல்லாமல் புதிதாய் வாங்கிய பாத்திரங்கள் பரிசாய், வந்த பாத்திரங்கள் இடத்தை அடைத்துக் கொண்டிருந்தது . சமையல் அறையின் வாசலில் இருந்து ஹாலை எட்டிப் பார்த்தேன். காய்கறி நறுக்குபவர்கள் தேங்காய் திருபவர்கள் ஸ்பீக்கரின் பாட்டின் சத்தத்தை மீறி குரலை உயர்த்தி பேசிக் கொண்டிருந்தனர் .
என்னருகில் நின்ற நண்பனிடம் ஒருவர் வந்து " மாமா பஸ் ஸ்டாப் வந்துட்டாகலாம். அங்கே இருந்து நடந்து வராவலாம். நான் வண்டியில போய் கூப்பிடு வந்துடுறேன் . வண்டி சாவி தாயேன் " ன்னு சொல்லி சாவி வாங்கிட்டு போனார் .
ஹாலைக் கடந்து இன்னொரு அறைக்கு நண்பன் கூப்பிட்டு போனான். அது அவனது நூலகம் . அவன் ஒரு பெரிய வாசிப்பாளி. சென்னையில் இருக்குற ரியல் எஸ்டேட் விலைக்கு புறாக் கூடு சைசு வீடே கட்ட முடியாமல் இருக்கறப்போ , நூலகத்துக்கு பெரிய இடம் போட்டு கட்டுற அளவுக்கு அவனுக்கு புத்தகங்கள் மீது அலாதிப் பிரியம் .
இதுவரை பார்த்த அறைகளில் இது மட்டுமே மிகவும் தூய்மையாக அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்ணாடி அலமாரியில் புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன. சுவரில் வரிசையாக போட்டோக்கள் வித விதமான சைசில் அழகாகத் தொங்க விடப்பட்டிருந்தன. சதுரமாக செவ்வகமாக முக்கோணமாக பல்வேறு உருவங்களில் சிரத்தையுடன் சீராக வைக்கப் பட்டிருந்தன .
ஒவ்வொன்றாக வரிசையாகப் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு பாட்டி சரட்டையில் எனக்கு புடித்த தேங்காய் துருவிய கடுங்காப்பி கொண்டு வந்து தந்தார்கள் . அதை கையில் வாங்கிக்கொண்டே போட்டோக்களை பார்க்க ஆரம்பித்தேன்.
முதல் போட்டோவில் ஆலிலையால் செய்யப்பட்ட விநாயகர் இருந்தார் . " டேய் . உனக்குத் தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே . ஏன் இந்தப் போட்டோ " ன்னு கேட்டேன் . "இந்தக் கலை வடிவம் எனக்கு புடிக்கும் டா" ன்னு உடனே பதில் சொன்னான். அடுத்த போட்டோவில் அவன் , அவனுடைய மனைவி , இரண்டு குழந்தைகள் சிரித்துக் கொண்டிருந்தனர் .
அதன் அழகை மெச்சி விட்டு அடுத்த அடுத்த போட்டோவுக்கு தாவினேன். நண்பனின் அப்பா அம்மாவை ஸ்டுடியோ வில் எடுத்த போட்டோ , அவனின் மாமனார் மாமியாரை ஏதோ கல்யாண விழாவில் எடுத்த போட்டோ என ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே சரட்டையில் இருந்த காப்பியை உறிஞ்சுக் கொண்டு இருந்தேன் . வாயில் மாட்டும் தேங்காய்த் துருவலையும் கடித்து மென்று கொண்டே இருந்தேன் .
அடுத்த போட்டோ அவனின் குழந்தைகளின் பல பருவத்தை பதிவு செய்து வைத்து இருந்தது . அதை நான் பார்க்கும் பொழுது நான் கேட்காமலே " பசங்க பெரிய பசங்களான பிரவு இந்த மழலை முகங்களை பார்க்க முடியாதுலா .. அதனாலே இது மாதிரி ஒரு போட்டோ வைக்கலாம்னு ஆசைப்பட்டேன் " ன்னு நான் கேக்க இருந்த கேள்விக்கு பதில் கொடுத்தான்.
குடும்ப போட்டோ பார்த்து முடிச்ச பிறகு , இன்னொரு பரிச்சயம் இல்லாத முகம் ஒன்று அடுத்த போட்டோவில் இருந்தது . " இது என்னோடைய காலேஜ் புரொபெசர். எனக்கு நிறய விசயங்களில் அவர் குரு . நான் இந்த நிலைமைக்கு வந்ததுக்கு அவர் தான் காரணம் . இப்போ அவர் ஊரில விவசாயம் பார்த்துட்டு இருக்கார் . மரியாதை நிமித்தமாக வச்சுருக்கேன் " ன்னு கூறி மகிழ்ந்தான் .
அடுத்த இருந்த இரண்டு போடோக்களில் இரண்டு அந்நியத் தேசத்து மனிதர்கள் இருந்தார்கள் . கிழக்கு ஆசிய மனிதர் போல இருந்தார்கள் . " முதல் போட்டோவுல இருக்குறவர் என்னோட கொரியா மேனேஜர் . என் வேலையை நம்பி என்னை அவங்க ஆபீஸ்-க்கு நிறய முறை கூப்பிட்டு வேலை கொடுத்தார். அவரு இந்த வீடு வாங்குனதுக்கு ஒரு முக்கிய காரணம், அவர் இல்லாட்டி இவ்ளோ பணம் கிடைச்சுருக்காது.
அடுத்தவரு ஜப்பான் காரரு. நான் அங்கே ரெண்டு மூணு வருஷம் இருந்தப்போ அவங்க குடும்பதுக்காரரா என்னைப் பாத்துக்கிட்டாரு. " ன்னு விளக்கினான்.
சரட்டை-யில் இருந்த துருவல் கலந்த காப்பி காலியாகிக் கொண்டிருந்ததது . இன்னொரு முகத்தைப் பார்த்ததும் " இவர் நம்ம ஸ்கூல் வாத்தியார்-லா " ன்னு அவனுக்கு படிக்க நிறைய பண உதவி பண்ணிய தெரிஞ்ச வாத்தியாரை அடையாளம் கண்டுகொண்டேன்.

கரும வீரர் காமராஜரின் படத்தை சேவைக்காகவும் பத்து தலை இராவணனின் சித்திரத்தை அவனின் கொடூர கோபத்திற்காகவும் சேகுவரா வின் படத்தை எழுச்சிக்காகவும் வைத்திருப்பதாக அவன் சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது கடைசி போட்டோ மூன்று குரங்குகள் போட்டோ என் கண்ணில் விழுந்தது . ஒன்று கண்களை மூடி மற்றொண்டு காதுகளை மூடி இன்னொன்று வாயை மூடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது . " இது மூனும் வரைஞ்ச படமா . இல்லை உண்மையான குரங்கா " ன்னு குசும்பாக கேட்டேன் . அவன் சிரித்தான் . அவன் சிரிப்பில் ஆயிரம் அர்த்தம் இருந்ததாக உணர்ந்தேன். குரங்கு செல்பி எடுக்க்கரப்போ போஸே கொடுக்கதா என்ன ? என்று எண்ணியபடி அந்த அறையை விட்டு வெளியேறினேன் .
வெளியே வந்தவுடன் சரட்டைய ஓரமாக வைக்கப் பட்டிருந்த வட்டுப் பெட்டியில் போட்டு விட்டு , காசு வைத்து கொண்டு வந்த ஆரஞ்சு கலர் கவரை நண்பனிடம் கொடுத்துவிட்டு " இன்னொரு கல்யாண வீட்டுக்கு போகணும். போயிட்டு வரேன்" ன்னு சொல்லிட்டு கிளம்பினேன் .அவன் வாழைத் தாரில் இருந்து ஒரு சீப்பு பழத்தை அறுத்து ஒரு பையில் போட்டுக் கொடுத்தான் . . வாங்கிக்கொண்டு , வெளியே விட்டுருந்த செருப்பை போடும் போது , ஸ்பீக்கரில் " நான் ஒரு முட்டாளுங்க . ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க நான் ஒரு முட்டாளுங்க " என்று பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது .

Comments

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் சிக்காமல்

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  துவாரங்களைப்  பெரிதாக்கினேன். “அதுவும், அதே  வரிசல  மேல இருக்குற அந்த மஞ்சக்கலரயும்  எடுத்துடுங்க “ இந்த முறை உறுதி செய்துவிட்டேன் . அவளே தான் .  திரும்பக் கூடாது.  இந்த இடத்தை  விட்டு அசையாம இதே மாதிரி குனிஞ்சே  உக்கார்ந்துருவோம் . “சத்தியத்தைத்  தேடிக்கொண்டு போகிறவனுக்குத்  துக்கத்தின்  பரிசு தான் எப்போதும் கிடைத்திருக்கிறது . புறக்கணிப்புகள் . மன முறிவுகள் . ஓட ஓட விரட்டல் “ னு  உயிரியல் பூங்காவில்  வாசித்த அதே  குரல்.அவள் எப்போதும்  கைப்பையில்  சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே  சில குறிப்புகள் “  வைத்திருந்த காலம்.  பூங்காவில்  அருகில் உட்கார்ந்து     அவள் கோடு  போட்டு வைத்திருந்த அந்த வரிகளை எனக்காக பலமுறை  வாசித்து காண்பித்து இருக்கிறாள் .    அந்தப் பக்கம் முழுவதும் ஏற்ற  இறக்கத்துடன்   வாசித்து “ கூரைக்  கோழிகள் சிரிக்கக் கூடும் . காகங்கள்  சிரிக்கக்கூடும். சற்றுக் குரூரமான  , கொடுமையான சிரிப்புத்தான்.  அப்போதும் சூரியன