Skip to main content

நண்பனுடன் ஒரு வார இறுதி

"ஓய்"   என்ற சத்தம் பின்பக்கம்  கேட்டு  அதிர்ந்து போனேன்.  திரும்பிப் பார்த்தால் ,  அவன்   என் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நின்றான்.    நான் நின்று கொண்டிருந்த அந்த   விடுதியின் வரவேற்பு  அறையில்  இருந்த  ஊழியர்கள்  அனைவர் முகத்திலும் கொஞ்சம்  அதிர்ச்சி கலந்த  வியப்பு . அவன் முகத்தில்  ஆயிரம் வாட்ஸ்  பல்பு  எரியும்  அளவுக்கு  சந்தோசம்.    பின்னே என்ன   வருடங்கள் கழித்து  பார்க்கும்  சேக்காளியைப்  பார்த்தால்  மகிழ்ச்சிக்கு  குறைவா என்ன?

அந்த இடத்தில் இருந்து  அவனது அறைக்கு போகும்போது நாங்க   போட்ட சத்தத்தைக் கேட்ட   லிப்டில் சில முகங்கள் சுருங்கின . சில  கண்கள்  வியப்பில்  ஆழ்ந்தன.   அந்த சத்தம் இவன் என்னுடைய நீண்ட கால   நண்பன்  என்பதை இந்த உலகுக்கு உணர்த்த  என்னுடைய  குரல்வளையும்  அவனுடைய  குரல்வளையும்  போட்டி போட்டு நடத்திய பந்தயம். நான் நினைத்திருந்தாலும் அவன் நினைத்திருந்தாலும் அதன்  வீரியத்தை  குறைத்திருக்க முடியாது.

உற்சாகம்  கரை புரண்டது .  பேச்சுக்கள்  நிற்காமல்   நீண்டன .  குசலங்கள்  விசாரிக்கப்பட்டன .   கணப் பொழுதில் லிப்ட் எங்களை அவன் தங்கி இருந்த தளத்துக்கு கொண்டு வந்து  எங்களை ஒரு   ஆரஞ்சுப் பழத்தை  சாப்பிட்ட வாய்  உடனே  நாக்குக்கு  புலப்பட்ட  தாங்க முடியாத  புளிப்பால் வெளியே  துப்பி எறிந்தது போல்   துப்பித் தள்ளியது.  

அந்த விடுதியின் அருகே  ஒரு பெரிய  குளம் ஒன்று  தண்ணீர் நிறைந்திருந்ததை   ஏழாவது மாடியில்  அவன்  அறையில் இருந்த கண்ணாடிச்  சாளரம்  காட்டிக்  கொடுத்தது . அது மார்ச் மாதத்தின் கடைசி வாரம். இந்நேரம் பூத்துக் குலுங்க வேண்டிய செர்ரிப் பூக்கள் இன்னும் மொட்டு விடக்கூட ஆரம்பிக்கவில்லை. குளத்தைச் சுத்தி  மக்கள்   நடை பயிற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்து "நடந்து கொண்டே பேசலாம் "  என்று  முடிவெடுத்தோம்.

கிராமத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ள   நம்ம தாத்தா  பாட்டிகள் செய்யும் வேலை  மாதிரி  அந்த வெள்ளிக்கிழமை  சாயங்காலம்  சூரியன் வேலை செய்து கொண்டிருந்ததது. சூரியன்  என்னதான் செய்கிறான் ? வெளிச்சம்  மட்டும் இருக்கிறது .. அவனுடைய வெம்மையை  யாரோ  கடத்திக் கொண்டு போய் இருந்த நேரமோ என்னவோ ..  கடும் குளிரும்  காற்றும் வயதான நோயுற்ற சிங்கத்தின் பிடரி மயிற்றில்  ஊஞ்சல் கட்டி  ஆடிய  சுண்டெலி போல்   ஆடிக் கொண்டிருந்தது .

அப்போது பேச ஆரம்பித்த நாங்கள்  ரெண்டு நாள்  கழித்து  விடைபெறும் நேரம் வரை  உற்சாகம்  கொஞ்சமும் குறையாமல்  ஓலைப் பாயில்  நாய் மோண்ட மாதிரி  பேசிட்டே இருந்தோம். பாஸ்போர்ட் ,விசா ,  பிளைட்  டிக்கெட் ஏதும் இல்லாம  எங்களுடைய பேச்சு இந்தியா ,  ஆஸ்திரேலியா , தாய்லாந்து மற்றும் அமெரிக்காவுக்கு பறந்து திரிந்தது.

 அவனோட அப்பா  பெங்களூர் வந்த போது  அவங்க வீட்டு வயலுக்கு  செல் போன் வழியாக கிணத்து மோட்டரை  கண்ட்ரோல் பண்ணி  தண்ணி பாய்ச்சிய  கதை,  பாலஸ்தீனியர்களால்   ஜெர்மனியில் படுகொலை  செய்யப்பட்ட 11 இஸ்ரேல்  ஒலிம்பிக் வீரர்களுக்காக 20 வருசம் இஸ்ரேல்   "கடவுளின் கோவம் " என்ற  பெயரில்  ஆடிய  ருத்ர தாண்டவம், நியுசிலாந்து விளையாட்டு வீரர்களால்  பாடப்படும்  ஹக்கா எனப்படும்    அறைகூவல்     என பலவற்றை எங்கள் பேச்சு  சுவைத்துப் பார்த்தது.


ஆஸ்திரேலியாவில் மரங்களை பொக்கிசமாக  கருதுவர்களாம்.   நம் வீட்டில் வளர்ந்த  மரத்தைக் கூட  அரசின்  அனுமதி இல்லாமல் வெட்ட முடியாதாம்.     எங்கோ  ஒரு இடத்தில் யாரோ போட்ட  விதை இயற்கையின்  கொடையால்   ஒரு பெரிய மரமாகி இருந்திருந்தால் , அந்த இடத்தின் விலைமதிப்பு  படு பாதாளத்திற்கு போயிடுமாம்.  அதை வாங்க  ஒரு நாதியும்  வராதாம். இப்படி கதை  கதையாக  பேசினோம் .  எங்கள் அரட்டையை உலகக் கோப்பை  இறுதிப் போட்டி ஆடும்   நியுசிலாந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் டிவிப் பெட்டிக்குள்  இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்  

 சனிக்கிழமை காலையில் எழுந்து  தலைநகரில் உலா செல்லும் பொருட்டு  அருகாமையில்  உள்ள  பஸ் நிறுத்தத்திற்கு சென்றோம்.  குளிருக்கு போட   நண்பன் இரவல் கொடுத்த தொப்பி ஒன்றையும்    அந்த வன்குளிருக்கு கொஞ்சமும் பொருத்தமற்ற ஒரு      ஜாக்கெட் ஒன்றையும் போட்டு இருந்தேன் .   கைகளை  நன்கு ஜாக்கெட்டின்  பைகளுக்குள் நுழைத்து  நடந்தோம் .  அங்கே  ஒரு  கறுப்பின வாலிபன் அந்தக் கடும் குளிரை பொருட்படுத்தாமல்  பேருந்துக்காக  காத்து இருந்தான்.   அவனுடன் அந்த காலைக்குளிரை பங்கு போட்டுக்கொள்ள நாங்களும் அங்கு சேர்ந்தோம் .   குத்தீட்டி போல குளிரலைகள்  வந்து எங்களுடைய  உடம்பில் வெளித்தெரிந்த பாகங்களை  எல்லாம்  ஒரு  பதம் பார்த்தது . சிறிது நேரம்  பஸ்  பயணம் முடிந்து ஒரு மணி  நேரம் ரயில் பயணம் . அமெரிக்கத்  தலைநகரின் Capitol building  அருகே உள்ள நிலையத்தில் இறங்கி வெளி வந்தோம் .


"கூகுள் மேப்"  வழி நடத்திச் செல்ல ,  அமெரிக்க ஐக்கிய மாமன்றம்  என்னும் சட்டம் இயற்றும் சட்ட மன்றத்தை நோக்கி  நடந்தோம் .  செல் போனைப் பிடிக்க வெளிவந்த   கையைப் பார்த்த குளிர் அதனுடைய  முழுப்பலத்தைப் பிரயோகித்து சண்டை போட ஆரம்பித்தது .   போராடித் தோற்ற  கரமோ , அடுத்த  கரத்தை கொடுங்குளிரிடம் அனுப்பியது. அந்தக் கரம்  வீராப்பாய் ஆரம்பித்து தோல்வியில் மண்டியிடும்போது உதவிக்கு  மேலும் இரண்டு கரங்கள் வந்தன .
உதடுகள் வறண்டு இருந்தன.  நாக்கு வளைவதற்கு முடியாமல் மட்டையாய் இருந்தது . அந்த  நாக்குடன் சில தன்னார்வத் தொண்டர்களுடன் பிறந்த ஆண் குழந்தைக்கு  விருத்தசேதனம் பண்ணுவது சரியா தவறான்னு  நாட்டாமைத் தனம் ..  போன் கால் அட்டெண்ட்  பண்ணவும் அதே குழையா நாக்கு தான் . குழறி உளரிப் பேசியது .எச்சில் கூட ஊற முடியாத   நாக்கு ஒபாமா பதவியேற்ற பிறகு  முதல் இரவு உணவு  சாப்பிட்ட இடத்தை பார்த்தது.

முந்திய இரவு பேசிய பேச்சுக்கு   இந்த குளிர் எங்களுக்கு ஒரு  ஓய்வு கொடுத்தது.   திரும்பும் வழியில் , ட்ரெயினில் மௌனத்தைச் சாப்பிட்டு  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தோம் . எதிர் இருக்கையில்  இருந்த  பேசும் திறனைத் தியாகம் செய்த மூன்று பேர்கள் தங்கள்  கை வந்த  கலையான கை மொழியில் நிறுத்தாமல் சுவராசியமாக பேசிக்கொண்டிருந்தனர்.  எங்கள் மௌனம் அந்த சம்பாஷணையை அவதானித்துக்  கொண்டிருந்தது . அங்கு நாய் மோண்ட சத்தம் இல்லை . நிசப்தமே வியாபித்து  இருந்தது.


ஞாயிறும் கால் கூப்பிட்ட இடத்திற்கெல்லாம்  நடந்தோம்  .  மனசில் தோன்றியதெல்லாம்  பேசினோம்.   பிரியா விடை தரும்போது மூன்று நாட்கள் சேர்த்து கிட்டத்தட்ட நாற்பதாயிரம் ஸ்டெப்ஸ் நடந்திருக்கிறோம்.  நடந்த ஸ்டெப்ஸை எண்ண கருவிகள் இருக்கின்றன .  பரிமாறிய வார்த்தைகளை எண்ணும் கருவி இல்லை. ஆனால் இந்த மனங்கள் எண்ணிக்கொண்டே இருக்கும்.


Comments

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் சிக்காமல்

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “ எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  துவாரங்களைப்  பெரிதாக்கினேன். “அதுவும், அதே  வரிசல  மேல இருக்குற அந்த மஞ்சக்கலரயும்  எடுத்துடுங்க “ இந்த முறை உறுதி செய்துவிட்டேன் . அவளே தான் .  திரும்பக் கூடாது.  இந்த இடத்தை  விட்டு அசையாம இதே மாதிரி குனிஞ்சே  உக்கார்ந்துருவோம் . “சத்தியத்தைத்  தேடிக்கொண்டு போகிறவனுக்குத்  துக்கத்தின்  பரிசு தான் எப்போதும் கிடைத்திருக்கிறது . புறக்கணிப்புகள் . மன முறிவுகள் . ஓட ஓட விரட்டல் “ னு  உயிரியல் பூங்காவில்  வாசித்த அதே  குரல்.அவள் எப்போதும்  கைப்பையில்  சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே  சில குறிப்புகள் “  வைத்திருந்த காலம்.  பூங்காவில்  அருகில் உட்கார்ந்து     அவள் கோடு  போட்டு வைத்திருந்த அந்த வரிகளை எனக்காக பலமுறை  வாசித்து காண்பித்து இருக்கிறாள் .    அந்தப் பக்கம் முழுவதும் ஏற்ற  இறக்கத்துடன்   வாசித்து “ கூரைக்  கோழிகள் சிரிக்கக் கூடும் . காகங்கள்  சிரிக்கக்கூடும். சற்றுக் குரூரமான  , கொடுமையான சிரிப்புத்தான்.  அப்போதும் சூரியன