Skip to main content

கூரைக் கோழிகள்

“அந்த  கத்தரிப்புக்கலர  எடுங்களேன் . மேல் அடுக்குல  ரெண்டாவது வரிச . அதுக்கு கீழ உள்ளது  “

எனக்கு தூக்கி வாரிப் போட்டது.  தெளிவாக் கேட்க   காதின் மடல்களை விரித்து  துவாரங்களைப்  பெரிதாக்கினேன்.

“அதுவும், அதே  வரிசல  மேல இருக்குற அந்த மஞ்சக்கலரயும்  எடுத்துடுங்க “

இந்த முறை உறுதி செய்துவிட்டேன் . அவளே தான் .  திரும்பக் கூடாது.  இந்த இடத்தை  விட்டு அசையாம இதே மாதிரி குனிஞ்சே  உக்கார்ந்துருவோம் .

“சத்தியத்தைத்  தேடிக்கொண்டு போகிறவனுக்குத்  துக்கத்தின்  பரிசு தான் எப்போதும் கிடைத்திருக்கிறது . புறக்கணிப்புகள் . மன முறிவுகள் . ஓட ஓட விரட்டல் “ னு  உயிரியல் பூங்காவில்  வாசித்த அதே  குரல்.அவள் எப்போதும்  கைப்பையில்  சுந்தர ராமசாமியின் “ ஜே ஜே  சில குறிப்புகள் “  வைத்திருந்த காலம்.  பூங்காவில்  அருகில் உட்கார்ந்து     அவள் கோடு  போட்டு வைத்திருந்த அந்த வரிகளை எனக்காக பலமுறை  வாசித்து காண்பித்து இருக்கிறாள் .    அந்தப் பக்கம் முழுவதும் ஏற்ற  இறக்கத்துடன்   வாசித்து “ கூரைக்  கோழிகள் சிரிக்கக் கூடும் . காகங்கள்  சிரிக்கக்கூடும். சற்றுக் குரூரமான  , கொடுமையான சிரிப்புத்தான்.  அப்போதும் சூரியனை நோக்கிப்  பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப்  பதில் “   . என முடிப்பாள் . முடித்துவிட்டு என்னை நோக்கி  ஒரு சிரிப்பு சிரிப்பாள் . கண்களை உயர்த்தி ,  முகத்தசைகளை  இறுக்கி , உதட்டை சுருட்டி ஜே . ஜே  வின்  எழுத்தை வியப்பாள் . அந்த முகக்  கோணலுக்காக இருந்த தவம் என்னுள் . பல  நேரங்களில் என் கேள்விகளுக்குப்  பதிலாக அந்த புத்தகத்தின் வரிகளை  சொல்லி இருக்கிறாள் .  அவ்வளவு மனப்பாடம்.

நான்கு வருடம் கழித்து அமெரிக்காவில் இருந்து  இந்தியா போனதால் என் மனைவிக்கு பண்ணவேண்டிய  ஷாப்பிங்  அதிகம் தான்.   சனி , ஞாயிறு  தவிர்த்து  ஒவ்வொரு நாளும் ஒரு  கடைன்னு  திட்டங்கள் தீட்டியிருந்த்தாள் . அன்றைய முறைக்கு நகரின் பிரபலமான சேலைக்கடைக்கு சென்றிருந்தோம் .  அவளுடைய  ஆசைக்கனவுகளுக்கு  எப்போதும் இந்த குழந்தைகள் தீனி போடுவதில்லை.  ரெண்டு வயதுப் பொண்ணு  தூங்கிவிட்டதால்  குழந்தையை  என் கையில் கொடுத்துவிட்டு  பெயர்  தெரியாத ஊர்களின்  பட்டுகளின்  குவியலுக்குள்  அவளை  நுழைத்துக் கொண்டாள் . நான் மங்களகிரி சில்க்ஸ்   கவுண்டரைப்  பார்த்தவாறு  கையில்  குழந்தையுடன் இருந்திருந்தேன்  .    இந்த நேரத்தில் தான்  பின்னால் இருந்து அந்த பழக்கப்பட்ட  குரல். பழக்கப்பட்ட என்ற  வார்த்தையின்  பொருளைத் தாண்டியப்  பழக்கம். அந்தப்  பழக்கத்தை எப்படி எழுதுவேன். 

“ பாஷை என்பது வேட்டை  நாயின் கால்தடம் .கால் தடத்தை நாம் உற்று பார்க்கும்போது  வேட்டை நாய் வெகு தூரம் போய் இருக்கும். .  “   அதை   எழுதுவதில் பாஷையை  நம்பி பிரயோஜனம் இல்லை .

ஒரு ஆண்  குரல் தொடர்ந்தது.   “  காசப்  பாக்காத .  அந்த மாம்பழக்கலர எடுத்துக்கோப்பா “.

“ அவ்ளோ காசு வேண்டாம் பா.  அதுக்கு  இதுல நான் ரெண்டு எடுத்துடுவேன் .  மெட்டெரியல்  அது மாதிரி  இருக்காது. பட்  ஓகே . “

எனக்கு குப்பென்றிருந்தது .  முன்னால்  இருந்த கண்ணாடியில்  முகம் பார்க்க முயற்சி செய்தேன்  .  தெளிவற்ற  பிம்பங்கள் மட்டுமே  ஆடிக்கொண்டிருந்தன .  பதட்டங்கள்  அதிகரித்து   இதயம்  எங்கோ  வேகமாக   குதிரைப்பாய்ச்சலுடன்  ஓடுவதை பொறுமையாக மனதால்  ரசிக்கமுடியாத  சூழல் .

சில நிமிடங்கள் எனக்கு அந்த நாட்களின் நிழல்கள்   ஒவ்வொன்றாய்  தீண்டிச் சென்றது. அவளை முதலில் சந்தித்த இடம்,  பரிமாறிய  வார்த்தைகள் ,  மலைக்கோயில் தரிசனம் , பாதையில் நடக்கும்போது  பூங்காவின் நீரூற்றில்  இருந்து மேல்  விழுந்த  தண்ணீர்த்  திவலைகள்  என்ற ஏதோ தெளிவற்ற பிம்பங்களின்  ஊடே  தெளிவானது அந்தக் குரல் மட்டும்.  இன்னும் முகத்தைப் பார்க்கவில்லை. எந்த மாதிரி ஆடை உடுத்தியிருப்பாள்  என்ற கற்பனையும் ஒரு ஓரத்தில்  முளைக்க ஆரம்பித்தது.

குரல் நகர்ந்து  எனக்கு  வலப்பக்கம் சென்றிருந்தது,  அப்படியே  ஒவ்வொரு ஊராக  கடந்து  பொச்சம்பள்ளி அருகே  அவளும் அவரும்  சென்றுவிட்டனர். மெதுவாக   தலையை வலப்பக்கம்  திருப்பி பார்த்தபோது கையில் ஒரு புடவையை வைத்து அவருடன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள் .  அவளே தான். இப்போது தெளிவாகத் தெரிந்தாள் . “ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான  இடைவெளிகள் வேண்டும்.  சில சமயம் காலத்தின் இடைவெளி . சில சமயம் தூரத்தின் இடைவெளி “.  பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருமணப் பத்திரிக்கை தர வந்திருந்தபோது  பார்த்தது.  பதட்டங்கள் குறைந்து ஏதோ வித்தியாசமான உள்ளக்கிளர்ச்சி .  வேகவேகமாக  எனது எடை குறைகிறது  .  மனம்  அதைவிட  லகுவாகிறது, அறையின்  காற்றாடி  என்னிடம் இருந்து என் மனத்தை மட்டும் அபகரித்து  பறக்க விடுகிறது. இவ்வளவு நாட்களாக இல்லாமல் இன்று ஏன் அவளைப்  பார்க்க நேர்ந்தது.   நாக்கு வறண்டு  கொண்டிருந்தது.

திருமணப் பத்திரிகையை  கையில் வைத்துக்கொண்டு  “ அவ்ளோ படிச்ச  உங்க அப்பாவுக்கு ஜாதி எங்க  இருந்து  வந்தது. ஜாதிய ரொம்ப நாள் தூக்கிட்டு இருக்க முடியாது.  அது கனக்கும் . நீயாவது இறக்கி வச்சுட்டு என்னோட வந்துடு. “ ன்னு நான் மன்றாடும்போது   அவள்   சிரித்துக்கொண்டே சொன்ன வார்த்தைகள்   “எருமைகளோ கழுத்துச் சங்கிலியுடன் , அவையே கழித்த  சாணி  மீது சரிந்து , உதிரி வைக்கோலை அரை மயக்கத்தில் அசைபோட்டுக்கொண்டு கிடக்கின்றன . “.   அவளுக்குள் நூறு சுந்தர ராமசாமிக்கள்  இறங்கியது போல் இருந்தது அன்று.  என்னால்  எளிதாக  சிரித்துக்கொண்டே  கடக்க இயலவில்லை.  சில மாதங்கள் எடுத்தது .


ஜே  ஜே  யைப் படித்த அவளால் எளிதாக  எப்படி  எருமைகளின்  சங்கிலிக்குள் சிக்கிக்கொள்ள முடிந்தது  என்று நீண்ட நாட்கள் எனக்குள் வினவிக் கொண்டேயிருந்தேன் . முரண்பாடுகள் இந்த  உலகத்தை  ஒவ்வொரு  நிமிடமும் உயிர்ப்பித்துக்  கொண்டிருக்கின்றன. அவைதான்  இந்த நிலப்பரப்பின்   புவியீர்ப்பு  விசை. அவள்  இல்லாத வெற்றிடத்தை  நிரப்ப ,  நானும்  ஜே.ஜே : சில குறிப்புகளை    திரும்ப திரும்ப  வாசிக்க  அவளின் அண்மையை  உணர்ந்தேன் . புத்தகத்தின்  அட்டையிலும் , ஒவ்வொரு  எழுத்துக்குள்ளும் ,  வெற்றிடத்திலும் தெரிந்தும் மறைந்தும் கொண்டிருந்தாள்.  அவள் விட்டுச் சென்ற வினாக்களுக்கு  அந்தப் பக்கங்களில் ஒளிந்திருந்த  விடைகள்  மெதுவாக  புலப்பட  ஆரம்பித்திருந்தது.    அவளுக்கு உள்ளே  ஊறிப்போய்  இருந்த சுந்தர  ராமசாமி   வழியாக நாங்கள் இருவரும்  உரையாடிக்கொள்ள ஆரம்பித்தோம்.

“அவளை அளக்கக் கருவிகள் எதுவும் இல்லை . விஞஞானம் இந்தச் சவாலை  ஏற்றுக்கொள்ளாது. மனித மனத்தின் கூறுகள் மிகப் பயங்கரமான அடர்த்தி கொண்டவை . பெரிய பள்ளத்தாக்கு. ஆழம். இருட்டு. அடர்த்தி. கண்களுக்குப் புலப்படாத தொலை தூரங்கள். இவற்றை  வகைப்படுத்த முடியாத ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு நிமிஷமும் இந்த உலகை முட்டி மோதிக்கொண்டிருக்கிறது .அந்தரங்கமான காரணங்கள் பல இருக்க , வேறொரு  வெளிப்படையான காரணம் சொல்லிக்கொண்டு  , இருட்சுவர்களில்  சாய்ந்து , ஆயுதங்களை உடலுக்குள் மறைத்து , முகங்களில்  புன்னைகைகளுடன்  பீறிடுகின்றன. கருத்துக்களை உற்பத்தி செய்கின்றன. புணருகின்றன. குழந்தைகளை  உற்பத்தி  செய்கின்றன. சிக்கல்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன . இந்த அகன்ற இருண்ட காட்டுக்குள் ஒருவன் நுழைந்து எப்படி வெளியே வரமுடியும் ? எல்லாவற்றையும் அறியவும் குறை நிறைகளைத் தொகுக்கவும் சாத்தியமா ?  எத்தனை நிலைகள்?. எத்தனை  எதிர் நிலைகள் ? அதன் பின் , எதிர்நிலைகளுக்குமான பதில்கள். பெரும் சுமடாய்ச் சுமந்துவிட்ட சிந்தனையின் அச்சுறுத்தலில் மனிதன் கடவுளின் கால்களில் சரணாகதி அடைந்துவிட்டாலும்  ஆச்சரியப்படுவதற்கில்லை.”

குரல்  சத்தத்தை  இழந்து உதட்டசைவுகளாக மாறிக்கொண்டிருந்தது.  தூரமாக போயிருந்தாள் . அவள் முகத்தில் பரவசம் . ஒவ்வொரு புடவையாய்  எடுத்துப் பார்க்கிறாள் .  அவரிடம்  தன் தோளில் போட்டுக் காண்பிக்கிறாள் . இன்னமும் என் கையில் உள்ள குழந்தை  உறங்கிக்கொண்டிருக்கிறது .   கழுத்தில் இன்னும் அவளுக்கு ராசியான  அதே  கருகு மணி  தொங்கியது. அந்த அன்னியோன்யத்தை  ரசித்துக் கொண்டே இருந்தேன்.   அழைப்பிதழ்  கொடுக்கும்போது இருந்த சிரிப்பிற்கும்  இந்த சிரிப்பிற்கும்  நிறைய  வித்தியாசங்கள்.   மீண்டும்  நான் மங்களகிரி  காட்டன் புடவைகளை எண்ண  ஆரம்பித்தேன்.  அவள் கண்ணில் விழுதுவிடக் கூடாது என்று தீர்மானித்தேன். தப்பி தவறி  அவள்  பார்த்துவிட்டால்  என்ன பேசுவது? மௌனத்தைத்  தவிர என்ன பேசினாலும்  அது அபத்தத்தின்  கலவையாகவே இருக்கும்.  இந்த நேரம் பார்த்து என் மனைவி எங்கே  போனாள்  என்று தெரியவில்லை.  அவளின் பின்  மறைந்து கடையை விட்டு ஓடிடலாம்.  இந்த  மௌனவெளி  எனக்கு பரிச்சயமில்லாதது .

அவளுக்கு தோலினால்  செய்யப்பட்ட  பொருட்களில்  நாட்டம் கிடையாது .  இன்றும் ஏதோ சணலினால்  செய்யப்பட்ட  கைப்பை  ஒன்றை தொங்க விட்டிருந்தாள் . நல்ல கைக்கடிகாரம் ஒன்றை திருமணப் பரிசாகக் கேட்டிருந்தாள் . எனக்கு அப்போது இப்போதிருந்த  தெளிவு நிலை இல்லை.  மனம் முழுவதும்  வியாபித்திருந்த  கோபம் திருமண விழாவுக்கே என்னைச்  செல்ல அனுமதிக்கவில்லை. நாட்களும்  மாதங்களும் கடந்தன. இலக்கியத்தின்  தீவிர ரசிகனாக   மாறிய  நான் , வேலை,  வேலை நிமித்தம்  பயணம், தீவிர வேலை,  நண்பர்கள் கூட்டம்,  பணம் ,  கல்யாணம், குழந்தைகள் ,  வரிக்கணக்கு, கடன், கார் , வீடு, தோட்டம்   என்று  இலக்கியத்திடம் இருந்து  வெகு தூரம் சென்றுவிட்டேன்.   இவைகள்  அவளின் நினைவுகளையும்    நினைவடுக்குகளின்  அடி  ஆழத்தில்  புதைத்துவிட்டது . இன்று  மௌனவெளியில்  குரலற்ற  வார்த்தைகளாய்   இந்த நினைவுகள் வழிதெரியாமல்  திகைத்து  நிற்கின்றன  .   கால இடைவெளி வார்த்தைகளின்  சத்தத்தை   கரிசனமின்றி நெரித்துவிடுகின்றன.


இந்த முறை திரும்பிப் பார்க்கும்போது  அவள் என்னைப்  பார்த்துவிட்டாள் .  ஒரு கணம் நான் என் கண்ணை அசைக்காமல் அவளையேப்  பார்த்துக்கொண்டிருந்தேன்.   அவள்  கண்கள்  அகலவிரிர்ந்து  ஆச்சர்யப்புன்னகையைப்  பரப்பி, விளித்துக்கொண்ட  மூளை இட்ட கட்டளையால்  உடனே  முகத்தசைகளை  சுருக்கினாள் .  நானும் மங்களகிரியை  நோக்க  ஆரம்பித்தேன். இப்போது  மீண்டும் பதட்டம் .  பேசணுமா வேண்டாமா என்ற ஒற்றைக் கேள்வி தலைக்குள் வாஷிங்மெஷின்ல  போட்ட துணியாட்டம்  சுற்றிக்கொண்டிருந்தது.  உச்சித்தலை  சிறிது வலியெடுத்தது .   வலதுகை  தலையத்  தடவிக் கொடுத்தது.  நா வறண்டு  தண்ணீர் தேடியது.   குழந்தைக்கு  வைத்திருந்த  தண்ணீர்  போத்தலைத்  திறந்து  ஒரு  முடக்கு குடித்தேன். இன்னும்  பதட்டம் அடங்கவில்லை.   காலையும் பகலும் கையறு மாலையும் ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப் பொழுதுஇடை  தெரியாமல் அவளுடன் மணிக்கணக்காய்  நாட்கணக்காய்  பேசிய பேச்சுக்கள் இப்போது  எனக்குள்   எங்கோ ஒளிந்துகொண்டு கண்ணாமூச்சியாடுகிறது.  காற்றாடி  வேலைசெய்யாத  எஸ்டிடி பூத்துக்குள் வியர்வையால் குளித்தபோதிலும் வார்த்தைகளுக்கு  பஞ்சமில்லாமல்  இருந்தது. இந்த நேரம்  அவள் வந்து  என்னிடம் பேசினால்  என்ன பேசுவது ..  மௌனத்தை  தவிர எதுவும்  சிறந்த பதில் இப்போது  என்னிடம்  இல்லை . மீட்பாரற்றுக் கிடந்தேன்.

பின் பக்கம் யாரோ நடந்து வருகிற சத்தம். அவளே தான்  வருகிறாள் என்ற பதற்றம் . அவளுக்கு  அபத்தமாகப் பேசத்தெரியாது . கண்டிப்பாக அவள் இல்லை  என்ற நம்பிக்கை .  சிந்தனை  மும்மரமாக  பணியில்  இருக்கும்போது  “ ஏடா இன்னும் அவ முளிக்கலியா ..  ரெண்டு மணி நேரம்  ஆச்சு. சரிய்  ..நான்  மேல  மூணு சுடிதார்  பாத்து வச்சுருக்கேன் . போட்டு காமிக்கேன்  வா” ன்னு  பின்னால்  தொடும்போதுதான்   கொஞ்சம்  நிம்மதி.  என் மனைவி  டயப்பர் பையை எடுக்க  மாடி நோக்கி நான் குழந்தையைத் தோளில்  தூக்கிவைத்து   புறப்பட்டேன். வழியெங்கும் வார்த்தைகள்  கொட்டிக்கிடந்தன. நானும் அவளும் மௌனவெளியில்  கணநேரத்தில் வீசியெறிந்த  வார்த்தைகள் ரோஜாக்களாய் ,முட்களாய், உடைந்த  கண்ணாடி  சில்லுகளாய் , தரையெங்கும் இறைந்து கிடந்தன.   படியேறி  திரும்பும்போது  திரும்பி ஒரு முறை பார்த்தேன்.  அவள்  கண்கள் என்னை நோக்கியிருந்தது .  விழிகள்  அகன்று  உணர்ச்சியின்றி  சலனமின்றி  இருந்தது.  நான் அடுத்த படியேறியபோது  , சுவர் அந்த பார்வையை  முறித்தது .

  சுழன்றுகொண்டிருந்த  அந்த  இரண்டு பேய்  பிளேடுகள்  ஒன்றையொன்று ஒரு முறை  தொட்டு விலகி மீண்டும் தொடும்போது தன்னிலை உடைந்து துண்டுகளாய் சிதறியிருந்தது . பதினைந்து  வருட சுழற்சி . நாளை மீண்டும் அவைகள்  பேய்   பிளேடாய்  மாறி சுழல  ஆரம்பிக்கும்.

எனக்குள்  இருந்த உணர்ச்சிப்பெருக்கை  என் மனைவி கண்டுபிடிக்க  நேரமெடுக்கவில்லை. “ என்னடா ஆச்சுன்னு. முழியே சரியில்ல ”என் முகத்தைப் பார்த்து  கேட்டாள் .   நாக்கில் இருந்த  கொஞ்ச  ஈரங்களை  வழித்து  வார்த்தைகள்  கரகரத்த  குரலில்  வெளிவந்தன.. “ பேராச்சி செல்வி “ னு சொல்லி நீட்டிய  ஆட்காட்டிவிரலை  அவள் இருந்த திசைநோக்கி ஆட்டி  ஆட்டி  காண்பித்தேன் .  “அப்டியா .. இரு  நான் பாத்துட்டு வரேன் “ ன்னு சொல்லி ஓட  ஆரம்பிச்சவளை ஒரு கையால்  இழுத்து நிறுத்தி அவளது நெற்றியில்  ஒரு இச் இட்டேன்.  அவள் அதைப்  பொருட்படுத்தாது விலகி கீழே  வேகமாக இறங்கிக்கொண்டிருந்தாள் .  எனக்கு பதட்டம் தணிய  ஆரம்பித்தது,

Comments

Popular posts from this blog

உறுபசி

எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உறுபசி என்ற நாவல் சம்பத் என்ற கதாபாத்திரத்தை அவர்கள் நண்பர்கள் மூவர் மற்றும் அவர்கள் மனைவி வாயிலாக புரிய முயற்சிப்பதேயாகும்.  நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்பம், சாதனைகள், சம்பாதித்த பணம் போன்ற விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையை மதிப்பீடு செய்து கடைசியாக வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்லில் முடிக்க இயலாது என்ற நிதர்சனத்தை உணரவைப்பது இந்த நாவலின் போக்கு. சம்பத் வாழ்ந்த ஒவ்வொரு தருணமும் ஒரு வண்ணமாக இருப்பதால் மொத்தமாக அவனது வாழ்க்கை ஒரு கலைடாஸ்கோப்.  அவன் இறந்த பிறகு கூடும் அவனது கல்லூரி வகுப்புத்தோழர்கள் அவனைச் சிந்தித்து அவனை வரைய முற்படுகின்றனர். விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்காக கையில் பாஸ்போர்ட்டுடன் வரிசையில் நிற்கும் நாம் வரிசையை விட்டு வெளியேவந்து அந்த இடத்தில் களியாட்டம் போடுவதைக் கற்பனை செய்ய முடியுமா? சமூகம் நமது மீது சுமத்தியிருக்கும் மதிப்பீடுகள் நமக்கு லட்சுமண் ரேகா. அதைக் கடப்பதற்கு நமக்கு வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பீடுகள் ஒன்றுக்கும் சிக்காமல்

ராக் பேப்பர் சிசர்

"பள்ளிக்கூடத்திற்கா?"   சாப்பாட்டுக்கான நேரம் இன்னும் ஆகவில்லை. இந்த நேரத்தில் அலுவலகத்தின் பின் வாசலை நோக்கி நான் விரைந்து கொண்டிருக்கும்போது சீன் இங்காம் தலைப்பட்டார்.  அவர் இதை யூகித்ததில் ஒன்றும் மாயமந்திரம் எதுவும் இல்லை.   பத்து வருடங்களில்  அவருடன் இணைந்து பல தடவை வேலைசெய்திருக்கிறேன்.  சீனுக்கு என்னுடைய பல முறைமைகள் அத்துப்பிடி. திங்கள், புதன், வெள்ளி அலுவலகத்திற்கு காலையில் பிந்தி வருவான், மதியம் மூணு மணிக்குத் தான் சாப்பிடப் போவான், வியாழக்கிழமை சாயங்காலம் லேட்டாத் தான் கிளம்புவான் என்று அவருக்குத் தெரிந்ததை பலரிடம் பெருமையாகச் சொல்லிக் கேட்டிருக்கேன்.   இதெல்லாம் இரண்டாவது வண்டி வாங்குவதற்கு முன்னால். இரண்டு வண்டி இல்லையென்றால் குடும்பம் ஊனமாய்க் கிடக்கும். இப்போதெல்லாம் பள்ளியில் குழந்தைகளை விட்டு, பின் மதியமானதும் இன்னொரு சுற்று போய் கூப்பிட்டு வந்து கொஞ்சம் நொறுக்குக் கொடுத்து அரை மணிநேரம் ஸ்கிரீன் டைம் கொடுத்து கராத்தே வகுப்பு, கணக்கு வகுப்பு என்று இன்னொரு சுற்று போய்  என் முழுநேர டிரைவர் வேலை உமை செய்கிறாள்.  வண்டியில் காத்திருக்கும்போது படித்த கதையை ராத்திரி