முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்துப் பேசி முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய அனுபவம் நெகிழ்ச்சியானதே. இருவருமே புளகாங்கிதம் அடைந்த ஒரு வித்தியாசமான தருணம்.
"அம்மா வருவாயா? " என்ற புத்தகத்தை அட்லாண்டா வாழ் தமிழர் ராஜி ராமச்சந்திரன் எழுதி பாண்டிச்சேரி "ஒரு துளிக்கவிதை" என்ற இயக்கம் அட்லாண்டா தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிட்ட நிகழ்ச்சியில் தான் அது நடந்தது. புத்தகத்திற்கு அணிந்துரை எழுதிய லட்சுமி சங்கர் அவர்கள் நுலில் உள்ள வியாசங்களைப் பற்றி ஆற்றிய பேரூரை இந்தப் புத்தகத்தை வாங்கத் தூண்டியது.
அன்றே படிக்க ஆரம்பித்து அமெரிக்க் குடும்ப வாழ்க்கையில் துளித்துளியாக கிடைக்கும் நேரங்களில் படித்து மூன்று நாட்களில் படித்து முடிக்க முடிந்தது. மிக எளிய நடை. படிப்போரை வேகமாக உள்ளிழுக்கும் ஒரு எளிமை எழுத்தில் இருக்கிறது.
அனுபவக் கட்டுரைகள் என்ற தலைப்பில் அனைத்துக் கட்டுரைகளையும் சேர்க்க முடியும் என்றாலும் அவை மிகவும் வேறுபட்ட பல அனுபவங்களை வைத்து கோர்க்கப்பட்ட அழகான கதம்பம். பயணத்தின் உல்லாசம், விருந்தின் நெகிழ்ச்சி, இருண்ட சாலையில் பயம், ஓரிரவின் திகில், பிரமித்த சேவை எனப் பல கண்ணிகள். ஜோடனையற்ற அன்றாடங்கள்.
விழி வில்லைகள், புவியிடங்காட்டி, ஊஞ்சல் படுக்கை, கண்ணாடி நூலடை, கூப்பிடு மணி, பனிக்கூழ், நேர்த்தியான இரவு, இடையீட்டு ரொட்டி, ஓடு பொறி, குழிப்பந்தாட்ட மைதானம், திரளணி, சாளரக் கடைப்பொருள் சுற்றுலா, சிற்றிடைப் பேருந்து எனத் தேர்ந்தெடுத்த மொழிபெயர்ப்புகள் பல இருந்தாலும் கவ்வி, குறியாய் இருத்தல் என்பவை என்னைக் கவர்ந்தவை. கராஜ், டிஸ்ஆர்ம், ஹீட்டர், கராஜ் ஓப்பனர் போன்ற பயன்பாடுகளே எழுத்துக்கு நெருக்கமாகக் கொண்டுசெல்கிறது.
போர்க்களம் நோக்கிய சஞ்சயனின் தூரப்பார்வை போன்றில்லாமல் தாம் காலுண்றியிருக்கும் நிலப்பரப்பில் வாழும் சமகால மாந்தர்களை பார்த்திருப்பது வாசிப்பிற்கு ஒரு புது அனுபவத்தைத் தருகிறது. இதுவே இந்த எழுத்தின் வெற்றி. எங்கிருந்தோ வந்த கண்ணணாகட்டும் விருந்தளித்த தைவானியக் குடும்பமாகட்டும், பரத அரங்கேற்ற நிகழ்ச்சியாகட்டும். ஒரு புலம்பெயர் தமிழ்க்குடும்பத்தின் பதியப்பட்ட இந்த பட்டறிவு இங்கு வாழும் மக்கள் அவர்களுக்கு ஏற்பட்ட ஏதாவது ஒரு அனுபவத்தின் மூலம் எங்கோ ஒரு புள்ளியில் தங்களை கட்டாயம் இணைத்துக்கொள்ள முடியும்.
இலையுதிர்க் காலத்தில் தெருவெங்கும் பறந்து கொண்டிருக்கும் இலைகள், குளிர்காலத்திய பனிப்பொழிவு, விடுமுறை விளக்குகள், வசந்த காலம் கொண்டாடியப் பூக்கள், வெயில் காலத்திய நீண்ட பகல் என காலத்தைப் பற்றிய பக்க பக்கமாக வருணனைகள் எங்குமே இல்லை. பெரும்பான்மை புலம்பெயர் இலக்கியங்கள் போல மரங்கள், பறவைகள் பற்றி குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் வரிக்கு வரி பலதரப்பட்ட மாந்தர்களே குழுமியுள்ளனர். எந்தப் பக்கம் வாசித்தாலும் மனிதர்கள்.
கப்பல் தொழிலாளியின் குடும்பங்களைப் பற்றிய கவலை. தொலைதூர நாட்டில் இனாம் கொடுக்க காசு இல்லாமல் இருந்த தருணம். ஓலைக் கைவேலை விற்கும் சிறுமியைப் பற்றிய சிந்தனை. மெக்கானிக் டானிற்கு சன்மானம். ஊஞ்சல் படுக்கை செய்யும் கடைக்காரர் படும் பாட்டின் மீது பச்சாதாபம். எனப் பல இடங்களில் எழுத்தாளரின் கருணை வெளிப்படுகிறது.
வாசிப்பு குறைந்த தமிழ் கூறும் நல்லுலகத்தில் எழுதுவது என்பது தன்னளவில் திருப்திகொள்வதாற்ககவும் தலைக்குள் தீராமல் சுழன்று கொண்டிருக்கும் சுமைகளை, கழிவிரக்கங்களை, நெருப்புப் பொறிகளை இறக்கி வைக்க உதவும் ஒரு வடிகால். அதைத் தாண்டி இந்த நூல் அமெரிக்க வாழ் தமிழர்களின் வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத்தோற்றம். சிறந்த வரலாற்றுப் பதிவு.
அட்லாண்டா தமிழ்ச் சங்கம் வாசிப்பையும் எழுத்தையும் பரவலாக்க நிறைய முயற்சிகள் செய்யவேண்டும். இந்த நூல் வெளியீடு கண்டிப்பாக பாராட்டத்தக்க முயற்சி. இது போல் நிறைய நூல்கள் நமது வாழ்க்கை முறைகளைக் குறித்து வரவேண்டும். அதுவே நம்மை மேம்படச் செய்யும்.
Comments
Post a Comment